கேரள மாநில போலீசார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் தோன்றிய உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறியத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கேரள மாநில அரசு சுதாரித்துக்கொண்டது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, கொரொனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களிடம் இருந்து சமூகப் பரவல் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க கேரள அரசு, முதலில், அனைவரும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கை கழுவ வேண்டும் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு செய்யும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மலையாள சினிமாவின் நட்சத்திர நடிகர் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் காட்சிகளின் உந்துதலுடன் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், ஒருவர் ஒரு மரத்தின் மீது கல் எடுத்து எரிகிறார். பின்னர், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால், சித்தரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு சிமெண்ட் சுவர் மிது நின்று கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து பயப்படும் அவர் தலை தெறிக்க ஓடுகிறார். கொரோனா வைரஸும் அவரைத் துரத்தி செல்கிறது.
கொரோனாவுக்கு பயந்து வேகமாக ஓடிய அந்த நபர் முகக் கவசத்துடன் தைரியமாகத் திரும்பி நிற்கிறார். இதனால், அச்சம் அடைந்த கொரோனா வைரஸ் பின் வாங்கி காணாமல் போகிறது.
பின்னணியில் மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் கடவுளே போலே பாடல் மாஸாக ஒளிக்க ஒரு ஆக்ஷன் குறும்படத்தைப் போல உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு வீடியோவுக்கான யோசனை மனோஜ் ஐபிஎஸ். அருன் பி டி இயக்கியுள்ளார். கொரோனாவைப் பார்த்து பயந்து ஓடும் நபராக ஜிபின் ஜி நாயர் நடித்துள்ளார்.
லாலேட்டனின் லூசிஃபர் படத்தின் கடவுள் போலே பாடல் ஒலிக்க ஆக்ஷன் குறும்படம் போல உருவாக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதற்காக முகக்கவசம் அணிய வலியுறுத்தும் இந்த இந்த வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”