வேடிக்கை பார்த்த மக்களை தலைதெறிக்க ஓடவைத்த சிறுத்தை..வைரலாகும் வீடியோ!

சிறுத்தையை விரைந்து பிடிக்குமாறு வனத்துறையினரை அறிவுறுத்தினார்.

By: Updated: December 28, 2018, 10:55:14 AM

வேலூரில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை வேடிக்கை பார்க்க சென்ற பொதுமக்களை, விரட்டி விரட்டி ஓட வைத்த சிறுத்தையின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சிறுத்தை வீடியோ:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் நேற்று (28.12.18) காலை 6 மணியளவில் விவசாய நிலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாரதி என்பவரை சிறுத்தை ஒன்று தாக்கியது. கூச்சலிடும் சத்தம் கேட்டு காப்பாற்றச் சென்ற அம்மனி அம்மாள் என்பவரையும் சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது.

ஊருக்குள் சிறுத்தை உலவும் தகவல் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவ, அக்கம்பக்கத்தில் உள்ள கிராமத்தினர் உள்பட ஏராளமான இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்கப் புறப்பட்டனர்.

சிறுத்தை வறண்ட ஏரியில் உள்ள ஒரு புதரில் பதுங்கியிருந்தது. வேடிக்கைப் பார்ப்பவர்களை வனத்துறையினர் எச்சரித்து விரட்ட முயன்றனர். ஆனால், சிறுத்தையைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், புதரில் பதுங்கிய சிறுத்தை மீது சில இளைஞர்கள் கற்களை வீசியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுத்தை ஓடி வந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கூட்டத்தில் பாய்ந்து தாக்கியது.

சந்தோஷ் என்ற இளைஞரின் கையை சிறுத்தை கடித்தது. மேலும் ஒருவரைத் தாக்கிய சிறுத்தை மீண்டும் ஏரியில் உள்ள மற்றொரு புதரில் சென்று பதுங்கியுள்ளது.

சிறுத்தை தாக்கிய 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்படுகின்றனர். சிறுத்தையைப் பிடிக்க வலையும், கூண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆந்திர பகுதியான வீராணமலை பகுதியில் இருந்து வழி தவறி சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 4 பேரை சிறுத்தை தாக்கிய பின்பும், வனத்துறை எச்சரித்தும், வேடிக்கை பார்க்க வரும் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.

புதருக்குள் மறைந்திருக்கும் சிறுத்தையைப் பிடிக்க கால்நடை மருத்துவக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது. அவர்கள், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே சிறுத்தை கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் நிலோபர் கபில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள சிக்கணாங்குப்பத்துக்குச் சென்ற அவர், சிறுத்தையை விரைந்து பிடிக்குமாறு வனத்துறையினரை அறிவுறுத்தினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Leopard charges at crowd and injures 4 in tns vellore visuals go viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X