இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் அதற்கான உடலமைப்புடன் இருக்கும்போது, ஒரு சிறுத்தை மரம் ஏறத் தெரிந்திருப்பதாலேயே மத்தின் நுனி கிளையில் இருக்கும் குரங்கைப் பிடிக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அரிதான வனவிலங்குகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் இயற்கை காட்சி வீடியோக்களைப் போன்று எப்போதும் புதுமையாகவே ஆர்வத்தை தூண்டுபவையாகவே இருக்கும். அந்த வரிசையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் மரக்கிளையின் நுனியில் தொங்கிக்கொண்டிருக்கும் குரங்கைப் பிடிக்க சிறுத்தை ஒன்று முயற்சிக்கும் வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் சாபி சாண்ட்ஸ் கேம் ரிசர்வ் வனப்பகுதியில் 2013-ம் ஆண்டு கேரி பார்க்கர் என்பவரால் இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டது. இந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று மரத்தில் ஏறி மரக்கிளையின் நுனியில் தொங்கிக்கொண்டிருக்கும் குரங்கைப் பிடிக்க மரக்கிளையை உலுக்குகிறது. ஆனால், குரங்கு மரக்கிளையை உறுதியாகப் பிடித்துக்கொண்டு விழாமல் அப்படியே இருக்கிறது. பலமுறை கிளையை ஆட்டி குரங்கைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுப்போன சிறுத்தை பின்னர் கீழே இறங்கி செல்கிறது.
இந்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி சுஸந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இந்த வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “விலங்கின் அளவு, வலிமை அதனுடைய பெருமை எல்லாம் இயற்கையில் பல முறை தோல்வியை சந்திக்கும். ஒரு சிறுத்தை உணவுக்காக குரங்கை குறிவைத்து அதை மரத்திலிருந்து அசைக்க முயற்சிக்கிறது. ஆனால், குரங்கு உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு நான் பதிவிட்ட ராஜா நாகத்திடம் இருந்து ஒரு குரங்கு தன்னை தற்காத்துக் கொள்ளும் வீடியோவை விட இது சிறந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் விலங்குகளும் அதற்கான உடலமைப்புடன் இருக்கின்றன. குரங்கு மரங்களில் தாவி ஏறி மரங்களில் வாழும் ஒரு விலங்காக உள்ளது. அதே போல, சிறுத்தைக்கு மரம் ஏறத் தெரியும் என்றாலும், அதனால், குரங்கைப் போல அவ்வளவு எளிதாக மரத்தில் தாவி விளையாட முடியாது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"