ஒன் டைரக்ஷன் (1டி) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் லியாம் பெய்ன் பிரபலமானார். இங்கிலாந்தை சேர்ந்த இவர் கடந்த 2008 முதல் இசைத்துறையில் செயலாற்றி வந்தார். 2010-ல் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலமாக வாய்ப்பு பெற்ற இவர், பிறகு தனியாக பாடல்களை வெளியிட்டார்.
ஆர்&பி ஜானரிலும் தேர்ந்தவரான லியாம் பெய்ன், தனது தோழியுடன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் அர்ஜெண்டினாவில் விடுமுறையை செலவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அவரது தோழி அர்ஜெண்டினாவில் இருந்து சென்றுள்ளார். பின்னர் வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
அங்கு 1டி குழு நண்பரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று புதன்கிழமை (அக்.16) மாலை விடுதியின் லாபிக்கு ஆண் ஒருவர் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வதாக அவசர உதவி எண்ணுக்கு புகார் சென்றுள்ளது. அது லியாம் தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Liam Payne tops Google search trending topics after news of his demise
இந்நிலையில், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து லியாம் பெய்ன் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக பியூனஸ் அயர்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அர்ஜென்டினாவின் தலைநகரின் ட்ரெண்டி பலேர்மோ பகுதியில் உள்ள காசா சுர் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து லியாம் பெய்ன் விழுந்தார், இதன் விளைவாக அவருக்கு மிகவும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள்." என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி பியூனஸ் அயர்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல் தொடர்பு இயக்குனரான பாப்லோ பாலிசிச்சியோ பேசுகையில், "லியாம் பெய்ன் அவரது அறையின் பால்கனியில் இருந்து குதித்துவிட்டார். உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு மேல் அவசர அழைப்பின் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்தனர். அவர் போதைப்பொருள் அல்லது மது அருந்தி இருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
31 வயதான லியாம் பெய்ன் தனக்கு போதை பழக்கம் இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலையில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்தார். அதை தவிர்க்க அவர் பயிற்சி மேற்கொண்டார் என்றும், 6 மாதங்கள் நிதானமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங்
இந்த நிலையில், முன்னாள் ஒன் டைரக்ஷன் பாடகர் லியாம் பெய்ன் உயிரிழந்ததையடுத்து, அவரது பெயர் கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. ட்ரெண்ட்ஸ் கூகுள் (trends.google) இணைய பக்கத்தின்படி, இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் லியான் பெயின் தொடர்பாக 5,00,000 க்கும் மேற்பட்ட தேடல்கள் பதிவாகியுள்ளது. மேலும் இந்த தேடல்கள் 1000 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது.
இதனிடையே, லியான் பெயின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.