#காதலர் தினம்: விமானம் மூலம் வானில் பிரம்மாண்ட இதயத்தை உருவாக்கி லண்டனில் சாதனை

இந்த கொண்டாட்டங்களுக்கெல்லாம் உச்சமாக லண்டனில், விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வானத்தில் பிரம்மாண்டமான இதய வடிவத்தை உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் நேற்று (புதன் கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. தங்களுடைய அன்பானவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து பலரும் அவர்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார்கள். காதலர் தினம் காதலிப்பவர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. கணவன்/மனைவி என பலரும் தங்கள் குடும்பங்களில் இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். பல நிறுவனங்களும் இன்றைய நாளை அன்பை பரிமாறிக் கொள்ளும் தினமாகக் கொண்டாடி வருகிறது.

இந்த கொண்டாட்டங்களுக்கெல்லாம் உச்சமாக லண்டனில், விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வானத்தில் பிரம்மாண்டமான இதய வடிவத்தை உருவாக்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. VS850P எனும் பயிற்சி விமானம், லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் தென்மேற்கு கடலோரம் வழியாக பயணம் செய்து இந்த பிரம்மாண்ட இதய வடிவத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனை 30,000 அடி உயரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வழியின் மூலம் பயிற்சி விமானத்தை செலுத்துவதற்காக, விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் தேசிய வான் போக்குவரத்து சேவைகளிடம் சிறப்பு அனுமதியையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

”பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால், நாங்கள் பயிற்சி விமானம் மூலம் சிறிய கேளிக்கையை நிகழ்த்தலாம் என நினைத்தோம்.”, ஏர்லைன்ஸின் இயக்குநர் ஜே.ஜே.புர்ரோஸ் கூறினார்.

இதனை சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

×Close
×Close