தேவராயம்பாளையம் ரவிக்குமார் : தன் சொந்த கிராம மக்கள் விமானத்தில் பயணிக்க ஆசைப்படுவதை உணர்ந்து, அதற்கான முயற்சி எடுத்து 120 பேரை விமானத்தில் பயணிக்க வைத்திருக்கிறார் எம்.ரவிக்குமார்.
தேவராயம்பாளையம் ரவிக்குமார் ஏற்பாட்டால் நெகிழ்ந்த கிராம மக்கள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேவராயம்பாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார் சொந்தத் தொழில் செய்து வருகிறார். தன் கிராமத்தில் யாரும் விமானத்தில் பயணித்ததில்லை, ஆனால் அவர்களுக்கு அதில் செல்ல ஆசை என்பதை உணர்ந்துக் கொண்ட அவர், டிக்கெட் - தங்குமிடம் உள்ளிட்டவைகளுக்கு தனது சொந்த செலவை ஏற்று அவர்களின் கனவை நனவாக்கியிருக்கிறார். இதற்கான மொத்தத் தொகை ரூ.4 லட்சம்!
”நானென்னால் விமானத்துல அடி எடுத்து வைப்பேன்னு நினைச்சதே இல்ல” என இடது காதிலிருந்து, வலது காது வரைக்கும் புன்னகைக்கிறார் சோமசுந்தரம். கோவையிலிருந்து சென்னை வரை விமானத்தில் பயணித்த 120 பேரில் இவரும் ஒருவர்.
“இது அவர்களின் நீண்ட நாள் கனவு. மொத்த கிராம மக்களையும் விமானத்தில் கூட்டிச் செல்வது சற்று கடினமான ஒன்று. ஆகவே அதில் விமானத்தில் ஏற முடிந்தவர்களை பட்டியலிட்டு, எனது நண்பர்கள் சிலரின் உதவியுடன், அதனை நிறைவேற்றினேன்” என்கிறார் ரவிக்குமார்.
சென்னையிலிருந்து திரும்பும் அவர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை வழியாக சாலை மார்க்கமாக பயணித்து தேவராயம்பாளையத்தை அடையவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.