/indian-express-tamil/media/media_files/2025/11/01/drives-uber-2025-11-01-21-51-18.jpg)
ரூ. 1,450 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்... ஆனால் அவரது வேலை டாக்சி ஓட்டுவது!
யாராவது ஊபர் (Uber) கார் ஓட்டுகிறார்கள் என்று சொன்னால், கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபரை நாம் கற்பனை செய்வது அரிது. ஆனால், இந்தியத் தொழிலதிபரான நவ் ஷா (Nav Shah) என்பவருக்கு ஃபின்லாந்தில் நடந்த ஊபர் பயணத்தின்போது, அப்படியொரு அனுபவம் கிடைத்தது. இந்தக் கதை தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
ஊபர் பயணத்தின்போது, 86 வயதான அந்த ஓட்டுநருடன் நவ் ஷா பேச்சுக் கொடுத்தார். அப்போது, “உங்களுடைய செலவுகளுக்கு எப்படிப் பணம் செலுத்துகிறீர்கள்?” என்று ஷா கேட்டார். அதற்கு அந்த ஓட்டுநர், பணிவுடனும் தன்னம்பிக்கையுடனும், “நான் ஒரு தொழிலதிபர். என்னுடைய நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 175 மில்லியன் டாலர்கள் (சுமார் ₹ 1,450 கோடி)” என்று பதிலளித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் 24 பெண் குழந்தைகளுக்குப் படிப்பிற்கான நிதியுதவியை (Sponsorship) வழங்கி வருவதாகவும், அந்த உதவிக்குத் தேவையான அனைத்துப் பணத்தையும் ஊபர் கார் ஓட்டுவதன் மூலம் தான் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.
ஓட்டுநரின் நெகிழ்ச்சியான பதில்: “எனக்கு 3 மகள்கள். அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்தேன்; அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார்கள். அதனால், மற்றப் பெண்களின் கனவுகளை அடைய என்னால் உதவ முடிந்தால், ஏன் செய்யக்கூடாது என்று நினைத்தேன்,” என்று அவர் சிரிப்புடன் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அவர்களது உரையாடல் தொடர்ந்தபோது, அந்த வயதான தொழிலதிபர் தனது வணிகங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்: “எங்களிடம் 13 நகைக் கடைகள், 6 உணவகங்கள், ஒரு உள்ளூர் செய்தித்தாள் மற்றும் 4 சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன.”
“இதை எல்லாவற்றையும் நீங்கள்தான் ஆரம்பித்தீர்களா?” என்று ஷா கேட்டபோது, அந்த ஓட்டுநர் பெருமையுடன், “என் அப்பாதான் 1929-ல் வெறும் 5 பவுண்டு பணத்துடன் இதைத் தொடங்கினார்” என்று பதிலளித்தார்.
நவ் ஷா, இந்த வீடியோவுடன் ஒரு நீண்ட பதிவையும் பதிவேற்றம் செய்தார். அதில் அவர், “செல்வம், வணிகம், பாரம்பரியம் என எல்லாவற்றை பார்த்த ஒரு மனிதர், இன்னும் அன்பு மற்றும் நோக்கத்துடன் மிகவும் எளிமையாக இருக்கிறார். உண்மையான வெற்றி என்பது நீங்க எவ்வளவு உயரத்தை அடைகிறீர்கள் என்பதல்ல, மாறாக வழியில் எத்தனை பேரை நீங்கள் உயர்த்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ விரைவில் வைரலானதுடன், ஆயிரக்கணக்கான இணையவாசிகளின் பாராட்டுகளையும் பெற்றது. ஒரு பயனர், "என்னவொரு சாதனை மனிதர். அவர் திருப்பி அளிக்கும் உதவி மிகச் சிறந்தது" என்று எழுதினார்.
மற்றொரு பயனர், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் விமான நிலையத்தில் இருந்து எனக்கான ஊபர் இவர்தான். நல்ல மனிதர், சிறந்த உரையாடல். பெண்களால் பயணப் பெட்டியை ஏற்ற முடியாது என்று கூறி, அவரே என்னுடைய சூட்கேஸ்களை ஏற்றி இறக்கி வைத்தார்!" என்று பகிர்ந்து கொண்டார்.
3வது நபர், "அவர் 86 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க இதுதான் காரணம். அவர் ஊபர் ஓட்டத் தேவையில்லை, ஆனால் அவ்வாறு செய்வது அவரை மக்களுடன் இணைத்து வைத்திருக்கிறது. இது அவருக்குப் புதிய வணிக யோசனைகளையும் கொடுக்கிறது. இது நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது என்று அறிவியல்கூட சொல்கிறது" என்று கருத்து தெரிவித்தார்.
நான்காவது பயனர், "எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ஒரு நாள் நானும் இதைச் செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us