மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா தொடர்பான ஒரு நெகிழ்ச்சியான தருணம் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் ஒரு பள்ளிக்குச் சென்றபோது மாணவர் ஒருவருக்கு கிட்டார் வாசிக்க உதவும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
சமீபத்தில் ஜிராங் தொகுதியின் நோங்ஸ்புங் ஏ கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, சங்மா ஒரு கிராமப் பள்ளியில் மாணவர்களுடன் உரையாடினார். பள்ளியைச் சுற்றி வந்து செயல்பாடுகளைக் கவனித்தபோது, ஒரு மாணவர் கிட்டார் வாசிக்க முயற்சிப்பதையும், ஆனால், வாசிப்பதில் சிரமப்படுவதையும் அவர் கவனித்தார். முதல்வர் சங்மா தலையிட்டு, விரல்களை சரியாக வைக்கும் முறையையும், கிட்டாரை சரியாக பிடித்து வாசிப்பதையும் மாணவருக்கு பொறுமையாக விளக்கினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சங்மா, “ஜிரோங்கில் உள்ள நோங்ஸ்புங் ஏ கிராமத்தில், ஒரு மாணவர் கிட்டார் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, நான் அங்கு சென்றிருந்தபோது பள்ளிக்கு ஒரு கிட்டாரை வழங்கினேன். அவர் இப்போது ஒரு அமெச்சூராக இருக்கலாம், ஆனால், ஒருநாள் அவர்களின் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படும்போது அவர் கற்றுக்கொண்டு வாசிப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று எழுதினார்.
வைரல் வீடியோவை இங்கே பார்க்கவும்:
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, பலர் முதல்வரின் எளிமையான தன்மையையும், இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதையும் பாராட்டினர். "ஏன் என்று தெரியவில்லை, ஆனால் இவரும் என் விருப்பமான முதல்வர், மிகவும் பணிவும் கவர்ச்சியும் உடையவர்" என்று ஒரு பயனர் எழுதினார். "உங்கள் பணிவை முழுமையாக வெளிப்படுத்த எனக்கு நல்ல வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை, நன்றி சார்," என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
"தயவு மற்றும் அன்பின் செயல்...... மாணவர்களுடன் இசையில் நீங்கள் நேரம் செலவிடுவதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சி" என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார். "இப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஐயா நீங்கள் உண்மையான ஒரு உத்வேகம்" என்று நான்காவது பயனர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், முதல்வர் சங்மா ஒரு கஃபேயில் கிட்டார் வாசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஐயன் மெய்டனின் கிளாசிக் பாடலான "வேஸ்டட் இயர்ஸ்" இன் பிரபலமான கிட்டார் சோலோவை அவர் வாசிப்பது காணப்பட்டது.