மனிதர்கள் வனவிலங்குகளை எவ்வளவு மோசமாக கையாள்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பனிப் பிரதேசத்தில் மனிதர்கள் சிறுத்தையை மீன் பிடிப்பது போல வலை விரித்து பிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் மீது மனிதர்கள் இடையே ஒரு ஆர்வம் இருக்கிறது. வனவிலங்குகளைப் பார்க்க வேண்டும் என்றால், காடுகளுக்கோ அல்லது உயிரியல் பூங்காக்களுக்கோ சென்றால்தான் பார்க்க முடியும். அதனால்தான், வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டால், எக்கச்சக்கமாக வைரலாகி விடுகிறது.
காடுகள் அழிக்கப்படும்போது, நகரங்களில் இருந்து மனிதர்கள் காடுகளுக்கு கூட்டமாக படையெடுக்கும்போது வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் நடக்கிறது. மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் வருகிற புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை வனத்துறையினர் பொறிவைத்து பிடித்து, பிறகு அவற்றை காடுகளில் விடுகிறார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்த வீடியோவில் ஒரு பனிப் பிரதேசத்தில் சிலர் கும்பலாக சேர்ந்து ஒரு சிறுத்தையை மீன் பிடிக்கிற மாதிரி வலை விரித்து விரட்டிப் பிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ வன விலங்கு ஆர்வலர்களின் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை ரஞ்சித் ஜாதவ் என்கிற பத்திரிகையாளர், வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞர் சுசந்தா நந்தா பதிவிட்டுள்ளார். அவர் இது குறித்து, “இந்த வீடியோ எப்போது எங்கே எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால், உண்மையாகவே இந்த வனவிலங்கை பரிதாபகரமான வழியில் கையாண்டிருக்கிறார்கள்” என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில், ஒரு பனிப் பிரதேசத்தில், 6-7 பேர் கும்பலாக வலையுடன் செல்கிறார்கள். அவர்கள் அங்கே இருக்கும் சிறுத்தையை சுற்றி வளைக்கிறார்கள். மீன் பிடிப்பது போல, வலையை விரிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுத்தை அவர்களைப் பார்த்து பயந்து பனி மலையில் ஏறுகிறது. அதன் பின்னால் பிளாஸ்டிக் கூடையுடன் செல்லும் ஒரு நபர் சிறுத்தை கோழி அமுக்குவது போல அடித்து அழுத்துகிறார். ஆனால், அந்த சிறுத்தை சீறி எதிர்க்கிறது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்த நபர் சிறுத்தையின் வாலைப் பிடித்து இழுத்து போடுகிறார். உடனடியாக அந்த சிறுத்தை வலையில் சிக்குகிறது.
உண்மையில் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களை வருத்தமடையவே செய்கிறது. ஒரு வனவிலங்கை இவ்வளவு மோசமாகவே கையாள்வது என்று கேட்க வைக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, சிறுத்தையை மோசமாகக் கையாண்டவர்களைக் கண்டிக்கும் விதமாக, “இந்த வீடியோ எங்கே, எப்போது எடுத்தது என்பது முக்கியமில்லை. ஆனால், இந்த மனிதர்களின் காட்டுமிராண்டித்தனம்தான் முக்கியம்.” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில், இது ஒரு காட்டுமிராண்டித்தனம்தான்.
மனிதர்கள் சிறுத்தையை மீன் பிடிப்பது போல வலை விரித்து பிடித்த வீடியோ பார்ப்பவர்களை பாவம் இல்லையா இந்த சிறுத்தை என்று வருத்தம் அடையச் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“