சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்..கலாய்த்து போட்ட மீம்ஸையும் ரசித்த அமைச்சர்!

இந்த மீம்ஸ்களை எல்லாம் நான் ரசிப்பதோடு அல்லாமல் எனது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பேன்

தன்னை கலாய்த்து மீம்ஸ் போட்ட மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வாழ்த்துக்கள் என்று மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அதிமுக அமைச்சரிகளில் செய்தியாளர்களை அதிகமாக சந்திக்கும் ஒரு அமைச்சர் யார்? என்றால் அது மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். செய்தியாளர்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கு அசராமல் நின்று பதில் சொல்வார். நடுவில் கேள்விகளை கலாய்க்கவும் செய்வார். அமைச்சர் ஜெயக்குமார் மீது மீஸ் கிரியேட்டர்களுக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம்.

ஊடகங்களில் அவர் என்ன கருத்து கூறினாலும், உடனே அதை மீம்ஸ் ஆக்கி வைரல் செய்து விடுவார்கள். இதுப்பற்றி அமைச்சர் ஜெயக்குமார் பலமுறை பகிரங்கமாக பேசியும் உள்ளார். என்னை பற்றி மீம்ஸ் போடுபவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள், அதைப்பற்றி நான் கண்டுக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு, ஜெயக்குமாரின் மொபைல் எண்ணுக்கு வித்யாசமான மீம்ஸ் ஒன்று வந்துள்ளது. அவரின் புகைப்படத்தை வைத்து குறிப்பு சொல்லும் பாடல் விளையாட்டு தான் அந்த மீம்ஸ். இதைப் பார்த்த அமைச்சர், அப்படி அந்த பாடல் என்னவாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துள்ளார். இதுப்பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடமும் அமைச்சர் கேட்டு தெரிந்துக் கொண்டுள்ளார். இதற்கான பதிலை அவர் தெரிந்துக் கொண்ட உடன், சற்றும் கோபப்படாமல் “எப்படியெல்லாம் யோசித்து மீம்ஸ் போடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்” என்று சிரித்துள்ளார்.

இதுப்பற்றி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றிலும் அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுடன் கலகலப்பாக பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ ஊடகங்களில் நான் அதிகம் பேட்டி கொடுப்பதால் என்னை பற்றி அதிகமான மீம்ஸ்கள் வருகின்றனர். குறிப்பாக எனது தலையை கலாய்த்து அதிகமாக மீம்ஸ்கள் போடப்படுகின்றன. இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஜாலியாக எடுத்துக்கொள்வேன். என்னைப் பற்றி மீம்ஸ் போடவே ஒரு கும்பல் ரூம் போட்டு யோசிக்கிறது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மீம்ஸ்களை எல்லாம் நான் ரசிப்பதோடு அல்லாமல் எனது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பேன்.

சமீபத்தில் கூட என்னை வைத்து சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால் என்ற பாடல் மீம்ஸ் போட்ட குழுவிற்கு நன்றி. எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசித்து இதை செய்கிறீர்கள்” என்று கலகலப்பாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சால் அரங்கத்தில் கைத்தட்டல்கள் பறந்தன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close