விராட் கோலியின் சவாலுக்கு பொங்கி எழுந்த மோடி.. வீடியோவை வெளியிட போவதாக ட்வீட்!

பதில் தந்திருப்பது  கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி  விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு , விரைவில் வீடியோவை வெளியிடப்போவதாக  பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி உடல் ஆரோக்கியம் குறித்து பேசுவார். யோகா செய்வது,  உடற்பயிற்சி என உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் பலவழிமுறைகள் குறித்து பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக மோடி ஃபிட் இந்தியா என்ற இயக்கத்தையும்  தொடக்கினார்.

கூடவே,  மோடி உடற்பயிற்சி செய்வது போன்ற 3டி வீடியோவும் வெளியானது.  இந்நிலையில் இரண்டு நாட்களாக ட்விட்டர் வலைதளத்தில் #FitnessChallenge  என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டானது. இதை தொடங்கி வைத்தவர்  இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன், இந்திய கேப்டன் கோலி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு ஓபன் சேலஞ் ஒன்றை வைத்திருந்தார்.

அவர்களிடம், நீங்கள் உங்களை எப்படி ஃபிட்டாக வைத்துக் கொள்கிறீர்கள் என்று வீடியோ வெளிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த சவாலை ஏற்று  ஹிர்திக் ரோஷன், கேப்டன் விராட்கோலி ஆகியோர் ஒவ்வொருவராக  தங்களின் உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,  விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, இந்த வீடியோ மூலம் பிரதமர் மோடி மற்றும் தனது மனைவி அனுஷ்கா சர்மா, முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு  FitnessChallenge  செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  கூடவே, தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவையும் கூடிய விரைவில் வெளியிடப்போவதாகவும்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி பிரச்சனை, காஷ்மீரில் அரசுக்கு எதிரான கலவரங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை ஒருபக்கம் மேலூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர்    FitnessChallenge ல் கவனம் செலுத்தி அதற்கு பதில் தந்திருப்பது  கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close