இலங்கையில் ஒரு குரங்குக்கு தினமும் உணவளித்தவர் இறந்ததால் துயரம் அடைந்த குரங்கு, அவருடைய உடலுக்கு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவத்தின் வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மனிதர்களில் மட்டுமல்ல ரத்தமும் சதையும் உள்ள எல்லா உயிரினங்களிலும் அன்பும் நன்றியும் கருணையும் நிறைந்து இருக்கிறது. அதற்கு உதாரணமாக இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இலங்கை இப்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தாண்டி பறந்துகொண்டிருக்கிறது. அனைவரும் அன்றாட உணவுக்கு எப்படி சமாளிப்பது என்று திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, நன்றி உணர்வு, கருணை இருப்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கும் விதமாக இலங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையில் வனத்தில் இருந்து வரும் ஒரு குரங்குக்கு தினமும் ஒருவர் உணவளித்து வந்தவர் இறதுவிட, அந்த குரங்கு பெரும் துயரத்துடன் அவருடைய உடலுக்கு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். காட்டில் இருந்து அப்பகுதிக்கு வரும் ஒரு குரங்குக்கு அவர் தினமும் உணவளித்து அதன் பசியை போக்கி வந்திருக்கிறார். அந்த குரங்கும் அவர் மீது அன்புடன் பழகி வந்திருக்கிறது.
இந்த சூழலில்தான், அந்த குரங்கு வழக்கம் போல, கடந்த திங்கட்கிழமை உணவிற்காக தனக்கு உணவளிக்கும் பீதாம்பரம் வீட்டுக்கு வந்திருக்கிறது. ஆனால், அங்கே தனக்கு உணவளித்து வந்த பீதாம்பரத்தின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்களின் கூட்டத்திற்கு நடுவில் சவப்பெட்டியில் இருந்த அவருடைய உடல் அருகே சென்ற அந்த குரங்கு சில நிமிடம் அவரை உற்றுப் பார்த்தது. பின்னர், அவருடைய உடல் அசைவில்லாமல் இருப்பதை கண்டு அவர் மீது கையை வைத்து சீண்டி எழுப்ப முயற்சி செய்தது. அப்போதும் அசைவில்லாமல் இருந்த பீதாம்பரத்திற்கு முத்தம் கொடுத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது. இறுதியில் பீதாம்பரம் இறந்துவிட்டதை உணர்ந்த குரங்கு கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியது.
தனக்கு தினமும் உணவளித்தவர் இறந்துவிட்டதை அறிந்த குரங்கு அவருடைய உடலுக்கு முத்தம் கொடுத்து அஞ்சலி செலுத்தி கண்ணீர் சிந்திய நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அங்கிருந்த சிலர் குரங்கை விரட்டினாலும் பீதாம்பரத்தின் உடலை விட்டு விலகாமல் அமைதியாக உடல் அருகே அங்கேயே இருந்தது.
பின்னர், பீதாம்பரத்தின் உடல் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட குரங்கு இறுதி சடங்கு வரை கூடவே இருந்துள்ளது. இந்த சம்பவம் விலங்குகளிடத்தில் மனிதர்கள் செலுத்தும் அன்புக்கு எவ்வளவு நன்றி உணர்வுடன் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாக இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.