viral video: தாய் யானையின் கண்காணிப்பில் ஒரு குட்டி யானை குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும்போது, தீடீரென ஒரு முதலை தாக்க வருவதைப் பார்த்த தாய் யானை பாய்ந்து சென்று ஒரு பஞ்ச் விட முதலை தலை தெறிக்க ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மனிதர்களுக்கு வன விலங்குகள் மீது ஒரு ஆர்வம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம், எல்லோராலும் காட்டுக்கு சென்று வன விலங்குகளை எளிதாகப் பார்க்க முடியாது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போது, பார்க்கத் தவறுவதில்லை.
அந்த வகையில்தாம், சமூக ஊடகங்களில் தினமும் நூற்றுக் கணக்கான வன விலங்குகள் வீடியோ வைரல் ஆவதைப் புரிந்துகொள்ள வேண்டும். வன விலங்குகளில் யானைதான் மிகப்பெரிய விலங்கு. யானைகள் என்றால் அனைவரும் அச்சம் கொள்வதற்கு பதிலாக அதைப் பார்க்க ஆர்வமாவதையும் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் வனதுறையைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் வனவிலங்குகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காட்டில் எடுக்கப்பட்ட வன விலங்குகளின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, காட்டில் ஒரு சிறிய குட்டையில் ஒரு யானைக் குட்டி குளித்துக் கொண்டிருக்கும்போது, அதை திடீரென ஒரு முதலை தாக்க வருவதைப் பார்த்த தாய் யானை உடனே பாய்ந்து சென்று முதலைக்கு ஒரு பஞ்ச் விட்டு மிதிக்க முதலை தலை தெறிக்க ஓடும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “யானைகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பதில் எந்த அளவிற்கு வேகமாக செயல்படுகிறது என்பது மனதைக் கவரும் விதமாக உள்ளது. அப்படி இங்கே ஒரு சிறிய நிகழ்வு. முதலை சரணடைய வேண்டியதாகி விட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விடீயோவில், தனது குட்டியை முதலை தாக்க வருவதைப் பார்த்த தாய் யானை வேகமாக செயல்பட்டு குட்டையில் இறங்கி முதலையை அடித்து மிதித்து கலக்குகிறது. பயந்து போன முதலை குட்டையை விட்டு வெளியேறி தலை தெறிக்க விடுகிறது. விலங்கா இருந்தால் என்ன? மனிதனாக இருந்தால் என்ன? தாய் பாசம்னா அது தனிதான். பின்ன அம்மானா சும்மாவா? இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"