மும்பையில் 11 வயது சிறுவன் ஒருவனை பிட்புல் நாய் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாயின் உரிமையாளர் வேண்டுமென்றே சிறுவன் மீது நாயைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மாங்கூர்த் பகுதியில் வியாழக்கிழமை நடந்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
வைரல் வீடியோவில், பயந்துபோன சிறுவன் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பிட்புல் நாயுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். நாயின் உரிமையாளர், 43 வயதான முகமது சோஹைல் ஹசன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ரிக்ஷாவின் முன் அமர்ந்து, சிறுவனின் அழுகுரலைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்.
வீடியோ தொடரும்போது, நாய் பையனை நோக்கிப் பாய்ந்து, அவனது கன்னத்தைக் கடிக்கவே, சிறுவன் அலறுகிறான். நாய் அவனது ஆடைகளைப் பிடித்து இழுத்தாலும், எப்படியோ அவன் ரிக்ஷாவில் இருந்து தப்பிக்கிறான். உரிமையாளர் தலையிடுவதற்குப் பதிலாக, நாய் பையனைத் துரத்தும்போதும் சிரித்துக் கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம்.
வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ விரைவாகக் கவனத்தைப் பெற்று, பெரும் எதிர்ப்பைத் தூண்டியது. பல சமூக ஊடகப் பயனர்கள் நாயின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். "அந்தக் குழந்தைக்கு எவ்வளவு அதிர்ச்சிகரமான அனுபவமாக இருந்திருக்கும். இந்த நபர்கள், மன்னிக்கவும் இந்த மனநோயாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதன்மூலம், எந்த ஒரு முட்டாளும் இதுபோன்ற அட்டூழியங்களைச் செய்யத் துணியக்கூடாது. மும்பை போலீஸ் தயவுசெய்து நடவடிக்கை எடுத்து குழந்தையின் மனநலனைச் சரி செய்யுங்கள்” என்று ஒரு பயனர் எழுதினார். மற்றொருவர், "பிரச்னை விலங்கு அல்ல, மனிதன்தான்" என்று பதிவிட்டார்.
"அவனுக்கும் (நாயின் உரிமையாளருக்கும்) அதே மாதிரி கடிக்க வைக்க வேண்டும்," என்று மற்றொரு பயனர் கருத்துத் தெரிவித்தார். “இந்தியாவுக்கு அமெரிக்கா போன்ற சட்ட அமலாக்கம் தேவை. அதுவரை நம்பிக்கை இல்லை” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.
பி.டி.ஐ செய்தியின்படி, பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். எஃப்.ஐ.ஆர்-ன் படி, அந்த நபர் தனது நாயை ஒரு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாவிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வேண்டுமென்றே ஏவிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் (பாரதிய நியாய சன்ஹிதா) பிரிவு 291 (விலங்குகளை கவனக்குறைவாக கையாளுதல்), பிரிவு 125 (எளிய காயம் ஏற்படுத்துதல்) மற்றும் பிரிவு 125(A) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, ஹாசனுக்கு BNS பிரிவு 35(3) இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.