இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப்பில் இருந்தும் ஹரியாணாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி டெல்லி சலோ என்ற கோஷத்துடன் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஹரியானாவின் முர்தாலில் அமைந்திருக்கும் அம்ரிக் சுகதேவ் தாபாவில் மூன்று நாட்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் அடித்து தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு மத்தியில் இந்த விருந்தோம்பல் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட இது வைரலாகியது. இது குறித்து அந்த தாபாவின் செய்தி தொடர்பாளரிடம் பேசிய போது, சீக்கியர்களின் கடமையில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது என்று கூறினார். எங்கு ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றார்களோ அவர்களுக்கு உணவு வழங்கிட வேண்டும் என்று கூறுகிறது மரபு என்றார்.
எத்தனை நாட்கள் விவசாயிகளுக்கான தேவை இருக்கின்றதோ அத்தனை நாட்களுக்கும் அவர்களுக்காக நாங்கள் எங்களின் கதவுகளை திறந்திருப்போம் என்று கூறினார். எத்தனை நபர்களுக்கு உணவு படைத்தீர்கள் என்று கேட்ட போது, உணவு மனித நேயத்தின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. நாங்கள் தட்டுகளையோ மக்களையோ எண்ணுவதில்லை என்று கூறினார் அவர். போராட்டம் நடைபெறும் வழியெங்கும் பல்வேறு நபர்கள் விவசாயிகளுக்காக தங்களின் ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களை திறந்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil