நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியல் களத்தில் தனக்கென்று தனி பாதை அமைத்து செயல்பட்டு வருபவர் சீமான். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் மூலம் அரசியல் களத்தில் இறங்கியவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து, தலைவராக இல்லாமல் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் இவரது பேச்சைக் கேட்கவே கூட்டம் அதிகமாக வரும். தேர்தல் களத்தில் தனித்தே செயல்படுபவர் தனது கொள்கைகள் மூலம் ஏராளமான இளைஞர்களை தன் வசம் வைத்துள்ளார்.
சீமான், சினிமாவில் இயக்குனர், நடிகர் என இரு அவதாரம் எடுத்தவர். முதலில் இயக்குனராக அறிமுகமானலும் பின்னர் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார். பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சீமான். அடுத்து, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார் மற்றும் எவனோ ஒருவன் போன்ற படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
இயற்கையோடு இணைந்து வாழ்தல் எனும் கொள்கையில் தீவிரம் காட்டுபவரான சீமான், தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துபவர். சமீபத்தில் சீமான், உடற்பயிற்சி செய்யும்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சீமான் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தொகுப்பாளரிடம், தம்பெல்ஸ் தூக்குவதை ஒரே நேரத்தில் 100 போடுவேன், சில சமயம் வெறி ஆயிடுச்சுனா, 1000 முறை போடுவேன் என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த அவரது தம்பிகளில், உடலினை உறுதி செய் அறிவை விரிவாக்கு கொள்கை வகுத்து நில் கூடி செயல் செய்யப்பழகு – அன்பு அண்ணன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், தமிழ்நாட்டின் புதின் சீமான் முதல்வரானால் செம கெத்துதான் என பதிவிட்டுள்ளார்.
ஒரு சிலரோ இந்த வீடியோவை கலாய்க்கவும் செய்துள்ளனர். சீமான் எப்போதும் சுத்த தமிழில் பேசுபவர். அந்த பேட்டியில் ஒரு இடத்தில் புரோட்டீன் என்று கூறினார். அதற்கு ஒரு நெட்டிசன் புரோட்டீன் ஆங்கில வார்த்தை, புரதச்சத்து என்பது தான் அதன் தமிழாக்கம் இத அண்ணனிடம் சொல்லுங்க என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர், தற்காப்பு கலைகள் பத்தி அண்ணனுக்கு ஒன்னுமே தெரியலை, அவருக்கு தெரிஞ்சத சொல்றாரு, சிரிப்பா வருது என்று கமெண்ட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil