இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஃபேஸ்புக்கில் மோசமாக விமர்சித்து ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா.
நஸ்ருதீன் ஷா பதிவு:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கேப்டன் விராட்டும் டெஸ்ட் தொடர், ஒருநாள் ஆட்டம் என அனைத்து போட்டிகளிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டி வருகிறார்.
அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி தனது 25வது டெஸ்ட் சதத்தை பூா்த்தி செய்தாா் .இதன் மூலம் குறைந்த போட்டிகளிலேயே 25 சதங்களை கடந்த வீரா் என்ற சாதனையிலும் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றது.
இப்படி ஒருபக்கம் ஏகப்பட்ட சாதனைகளை செய்து வந்தாலும், சண்டகோலி விராட் தினம் தினம் சந்திக்கும் சர்ச்சைகளும் ஏராளம். சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக கொஞ்சம் கோபத்துடன் ”வெளிநாட்டி வீரர்களை பிடிக்கும் என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
பதிலுக்கு ரசிகர்கள் விராட்டின் பழைய வீடியோவை எல்லாம் ஃப்ளிட்டர் எடுத்து வருத்தெடுத்தனர். அப்போது விராட்டை விமர்சித்த ரசிகர்கள் தான், இன்று அவருக்கு பிரச்சனை என்றதும் ஓடோடி வந்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகா் நஸ்ருதீன் ஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “விராட் கோலி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரா் மட்டுமல்ல. உலகின் மோசமான நடத்தைக்கு சொந்தக்காரரும் கூட.
அவரது விளையாட்டு திறமை, அவரது மோசமான நடவடிக்கைகளால் மறைந்துவிடுகிறது” என்று பதிவிட்டுள்ளாா். மேலும், “எனக்கு நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை” என்றும் அவா் பதிவிட்டுள்ளாா்.
நஸ்ருதீன் ஷாவின் இந்த கருத்து விராட் ரசிகர்களை மட்டுமில்லை ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் சிலர் நஸ்ருதீன் ஷாவின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.