இந்திய கிரிக்கெட் அணி, 27 ஆண்டுகளாக இலங்கை அணியிடம் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழக்கவில்லை என்ற வரலாற்று சாதனையை இழந்ததால், பயிற்சியாளர் கம்பீரை விமர்சித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி டி20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு, தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் நிறைவுடன் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்தியா உலகக் கோப்பை வென்ற தொடரில் விளையாடியவருமான கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
எல்.எஸ்.ஜி, கே.கே.ஆர் ஐ.பி.எல் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார் என்ற நற்பெயர் காரணமாக, கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளார் ஆனதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உருவானது.
கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய முதல் சுற்றுப் பயணம் இலங்கையில் அமைந்தது. இலங்கையில், டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது.
இந்தியாவிடம் இருந்து 27 ஆண்டுகளாக ஒருநாள் தொடரை வெல்ல முடியாமல் இருந்த இலங்கை அணி, 3-வது ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று தொடரை 2-0 என கைப்பற்றி முற்றுப்புள்ளி வைத்து வரலாற்று சாதனை படைத்தது. 27 ஆண்டுகளாக இலங்கை அணிடம் ஒருநாள் தொடரை இழக்கவில்லை என்ற வரலாற்று சாதனையை இந்தியா இழந்தது. இதையடுத்து, இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் கவுதம் கம்பீரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
இந்த போட்டியின் ஆரம்பத்தில், ஹிட் மேன் ரோஹித் சர்மா பவுண்டரிகளை விளாசியதால் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத அளவில் படுதோல்வியில் முடிவடைந்தது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே தனது சுழலில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பியது அதிர்ச்சி அளித்தது. இதனால், இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரை இழந்தது மட்டுமில்லாமல், 27 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த சாதனையையும் இழந்தது.
1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான முதல் இருதரப்பு ஒருநாள் தொடரை வென்றதால், கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகிவிட்டார் இனி இந்திய அணிக்கு சாதனைப் பயணம்தான், கவுதம் கம்பீர் சகாப்தம் தொடங்கிவிட்டது என்று கூறப்பட்ட நிலையில், இந்திய அணி தக்கவைத்து வந்த சாதனை ஒன்று முடிவுக்கு வந்தது. இதனால், நெட்டிசன்கள் கவுதம் கம்பீரின் சகாப்பதம் தொடங்கிவிட்டது என்று கிண்டலாக விமர்சித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஒரு எக்ஸ் பயனர், “கம்பீர் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை வெற்றி என்ற பெருமையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், இந்தியா 27 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது என்ற பெயரை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்” என்று ட்ரோல் செய்துள்ளார்.
மற்றொரு எக்ஸ் பயனர், “கௌதம் கம்பீர் சகாப்தம் தொடங்கியது...
இந்தியா 27 ஆண்டுகளுக்கு, இலங்கையிடம் தொடரை இழந்தது” என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“