பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பலரும் அரசாங்கத்தை விமர்சித்துவரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்கு சென்ற நண்பர்கள் மணமக்களுக்கு விலை உயர்ந்த பரிசுன்னு கவர்மெண்ட்டைக் கலாய்த் பரிசளித்துள்ளனர். அப்படி என்ன பரிசளித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படும்போது மக்கள் தங்கள் எதிர்ப்பை போராட்டங்களின் வழியாக வெளிப்படுத்துவார்கள். அதே போல, மக்கள் போராடித்தான் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. அரசை பகடி செய்யும் விதமாக வேறு வடிவங்களில் வேறு இடங்களிலும் வெளிப்படுத்தலாம்.
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெங்காய விலை கிலோ 130ஐ தாண்டியபோது, திருமணத்தில் மணமக்களுக்கு உறவினர்கள் வெங்காயம் பரிசளித்து விலைவாசி உயர்வை பகடி செய்தனர்.
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.85.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர் 785 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய எரிபொருள்களான பெட்ரோல், எல்.பி.ஜி சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து போராட்டமும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமக்களின் நண்பர்கள், விலை உயர்ந்த பரிசாக பெட்ரோலையும் கேஸ் சிலிண்டரையும் பரிசாக அளித்து கவர்மெண்ட்டை கலாய்த்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல், கேஸ் சிலிண்டர் பரிசளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய கவர்மெண்ட்டைக் கலாயக்கும் விதமாக விலை உயர்ந்த பொருட்களாக மாறியிருக்கும் பெட்ரோலையும் கேஸ் சிலிண்டரையும் பரிசளித்துள்ள வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"