New Update
/
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் இசை மதிவாணன் உள்ளிட்ட 3 பேர் விசாரணைக்கு புதன்கிழமை நேரில் ஆஜரானார்கள்.
தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பினருடன் தொடர்புள்ளதாக, சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசி, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ .ஏ. அதிகாரிகள் ஃபிப்ரவரி 2-ம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில், திருச்சி மாவட்டத்தில், சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே போல, தென்காசி, சிவகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனை முடிவில், 1 லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான சட்ட விரோதமான புத்தகங்கள் சிலவற்றை பறிமுதல் செய்ததாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் இசை மதிவாணன் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு புதன்கிழமை நேரில் ஆஜரானார்கள். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் வந்த வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.