நாட்டு மக்களுக்காக போரிட்டு இறக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள், அவர்களின் மரணத்திற்கு பிறகு எத்தகைய வாழ்க்கையை வாழ்கின்றனர் என்பதை நாம் தெரிந்துகொள்ளும்போது, ராணுவ வீரர்களைவிட அவர்களின் குடும்பத்தினர் மீதே நமக்கு மரியாதையும், அன்பும் ஏற்படும். ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகள் மீதமிருக்கும் வாழ்க்கையை மிச்சமிருக்கும் நினைவுகளுடனேயே கழிக்க வேண்டியிருக்கிறது.
அப்படி, கடந்த நவம்பர் மாதம் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அக்ஷய் க்ரிஷ். இவருடைய மனைவி சங்கீதா, நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் தன் கணவர் குறித்து முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவர் எழுதியிருப்பதாவது,
"நீ தனிமையாக உணரும்போது என்னை நினைத்துக்கொள். அப்போது உன் அருகில் இருப்பேன் என உனக்கு சத்தியம் செய்யமாட்டேன். ஆனால், உன் கண்களை மூடினால், நீ என்னை பார்க்க முடியும்.", என அக்ஷய் எனக்காக எழுதியது உண்மையாகும் என நாங்கள் உணர்ந்திருக்கவில்லை. அவருக்கு கடைசி காரியத்தை செய்யக்கூட அவரது தந்தையால் முடியவில்லை. அக்ஷய் என்றால் இறவாதவர் என்று அர்த்தாம். ஆம், அவர் அந்த பெயருக்கு ஏற்பதான் வாழ்ந்தார்.
இப்போது, அவர் எங்களுடன் இருப்பதைபோல் நாங்கள் உணர்வதால், உணர்வுப்பூர்வமாக நாங்கள் நிலையாக இருக்கிறோம். ஆனால், எல்லா நாட்களும் அவ்வளவு எளிதாக கடந்துவிடாது. எல்லா வாட்ஸ் ஆப் குரூப்களிலிருந்தும் அவருடைய பெயர் 'Akshay left' என இருக்கும். அவருடைய மகளின் பிறந்த நாள் அன்று காலையில் ஏன் இந்த சம்பவம் நடக்க வேண்டும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் திரும்பவும் வரமாட்டார் என்பதை நாங்கள் உணர, அதனை ஞாபகப்படுத்த ஏதாவது தேவையா?
என் மகளைப் பொறுத்தவரை அவருடைய அப்பா உயிருடன் இருக்கிறார். ஒவ்வொரு ராணுவ வீரரையும் சீருடையில் பார்த்தால் அவள் சல்யூட் அடிக்கிறாள். தேசிய கீதம் ஒலிக்கும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று சொல்கிறாள்.", என குறிப்பிட்டிருந்தார்.