பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிக்கும் பாடலை தடை செய்யுங்கள் : பிரதமருக்கு கடிதம்!

இளைஞர்களின் கண்ணழகிக்கு எதிர்ப்புகள் கிளம்ப துவங்கியுள்ளன.

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், கண்ணடிக்கும் ’மணிக்ய மலரய பூவி’பாடலை தடை செய்யக் கோரி பாஜக தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஃபேஸ்புக், யுடூயூப், ட்விட்டர் என எந்த பக்கம் திரும்பினாலும் பிரியா வாரியர் குறித்த பேச்சு தான். ஒரே நாளில் இளைஞர்களின் ஹாட் சென்சேஷனாக மாறிய பிரியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ’ஒரு அடார் லவ்’ மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’மணிக்ய மலரய’ பாடலில் தான் பிரியாவை இளைஞர்கள் முதன்முதலில் பார்த்தனர். அன்றைய இரவே, பிரியா வாரியர் இணையத்தின் வைரல் நாயகி ஆனார்.

அந்த பாடலில், பிரியாவின் கண்ணடிக்கும் அழகு ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்து விட்டு சென்றது.இந்த பாடலை வைத்து, மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என இணையமே சூடுபிடிக்கத் துவங்கியது. பிரியா பிரகாஷ் கொடுக்கும் எக்ஸ்பிரஷனுடன் கேப்டன் விஜயகாந்த் வெர்ஷன், மோடி வெர்ஷன், மிஸ்டர் பீன் வெர்ஷன், ராகுல் காந்தி வெர்ஷன், ட்ரம்ப் வெர்ஷன், விஜய், அஜித் என அனைத்து நபர்களையும் வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் விளையாடினர். காதலர் தினத்தன்று. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ’ஒரு அடார் லவ்’படத்தின் டீசரும் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் தீயாக பரவியது.

அதன் பின்பு, பிரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ரசிகர்களால் குவிய துவங்கியது. ஒரே நாள் இரவில் 3 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான வாலோவர்ஸ்களை கொண்டுள்ள ஓவியா, துல்கர் சல்மான், அனுஷ்கா ஷெட்டி, மோகன்லால், திரிஷா, அமலா பால் என அனைத்து பிரபலங்களை விட பிரியா புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில், தற்போது இளைஞர்களின் கண்ணழகிக்கு எதிர்ப்புகள் கிளம்ப துவங்கியுள்ளன.

முன்னதாக, பிரியா இடம்பெற்றிருக்கும் பாடலின் வரிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி ஐதராபாத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் அமைப்பினர் சிலர் அவர் மீது புகார் அளித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, தற்போது பாஜக தலைவர் சஞ்சிவ் மிஸ்ரா பிரியா இடம்பெறும்  ’மணிக்ய மலரய பூவி’பாடலை உடனடியாக தடைசெய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் “ இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் மலையாள பாடலான மணிக்ய மலரய பூவி’பாடலை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த பாடலில் இடம்பெறும் நடிகை பிரியாவின் கண்ணசைவுகள் இளைஞர்களின் எண்ணத்தை தீய வழிக்கு கொண்டு செல்வது போன்று தோன்றுகிறது. பள்ளி மாணவர்களின் காதல் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்றைய தலைமுறையினருக்கு இந்த பாடல் தவறான சிந்தனைகளை தருகிறது. பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இந்த பாடல் குறித்து பேசுகின்றனர். விரைவில் அரசு பொதுதேர்வு வரவுள்ளது. எனவே இந்த காரணத்தினால் பாடலை நாடு முழுவதும் தடைசெய்ய  வேண்டும்” என்று கடித்தத்தில் கூறியுள்ளார்.

 

×Close
×Close