மோசமான வானிலை காரணமாக ரியாத்தில் இருந்து இஸ்லமபாத் செல்ல இருந்த விமானம் தம்மம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. வானிலை சரியானவுடன், அந்த விமானத்தை இயக்கிய விமானி மீண்டும் விமானத்தை இயக்கி மக்களை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வார் என்று பார்த்தால், வேலை பாத்து டையர்டா இருக்கு. என்னுடைய ஷிஃப்ட் நேரம் இவ்ளோ தான். இப்போதைக்கு என்னால ஒரு குண்டூசிய கூட அசைக்க முடியாது என்று டாட்டா காட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைலட்டின் இந்த அறிவிப்பால் செம்மையா கடுப்பான பயணிகள் போராட்டத்தில் இறங்க, பைலட்டுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையான பி.ஐ.ஏ பைலட்டுக்கு ஆதரவாக தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். ஒரு விமானி தன்னுடைய ஷிஃப்ட்டில் ஒரு விமானத்தை இயக்கினால் அடுத்த விமானத்தை இயக்க அவருக்கு நிச்சயமாக ஓய்வு தேவைப்படும். எனவே அவர் ஓய்வு எடுத்த பிறகு தான் மீண்டும் விமானத்தை இயக்குவார் என்று கூறிவிட்டது. ஒரு வகையில் பார்த்தால் இது பயணிகளின் நன்மைக்கான முடிவு தான். ஆனாலும் கூட தம்மம் விமான நிலையத்தில் போராட்டத்தில் இறங்க, விமான நிலைய பணியாளர்கள் அவர்களை சாந்தப்படுத்தி அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர் முறையாக ஓய்வு எடுத்தப்பின்னர் தான் விமானத்தை இயக்குவார். அதுவரை பயணிகள் தங்களின் விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அறிவிப்பையும் விமான நிறுவனம் வழங்கியதாக கல்ஃப் செய்தி கூறுகிறது.
விமானிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஒரு விமான பயணத்திற்கும் அடுத்த விமான பயண இயக்கத்திற்கும் இடையே 10 மணி நேர இடைவெளி தேவை என்று ஃபெடெரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil