பாரிஸில் நடைபெறும் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வியாழக்கிழமை பிரான்ஸ் சென்றிருந்தார்.
புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்த உச்சி மாநாட்டிற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பாரிஸில் உள்ள பாலைஸ் ப்ரோக்னியார்ட்டுக்கு வந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிக சலசலப்பை உருவாக்கி உள்ளது. பாரிஸில் மழை பெய்து கொண்டிருந்ததால், ஷேபாஸ் தனது காரில் இருந்து இறங்குவதையும், ஒரு பெண் ஊழியர் அவரைக் குடையுடன் அழைத்துச் செல்வதையும் வீடியோ காட்டுகிறது.
இருப்பினும், ஷேபாஸ் அந்த பெண்ணிடம் இருந்து குடையை எடுத்துக்கொண்டு நுழைவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார். இதனால், அந்த பெண் ஊழியர் மழையில் நனைந்தபடியே அவருக்குப் பின்னால் நடந்து சென்றார்.
அவர் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், அவரை பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா வரவேற்றார்.சுவாரஸ்யமாக, இந்த வீடியோ பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து பலரும் ஷேபாஸ், அந்த பெண்ணை மழையில் நனையச் செய்ததை விமர்சித்துள்ளனர். இந்த உணர்வை எதிரொலித்து, ஒரு ட்விட்டர் பயனர், “அவரிடமிருந்து குடையை வாங்க வேண்டிய அவசியம் என்ன? அவரை நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்ல அந்த பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் அந்த பெண்ணை குடை இல்லாமல் விட்டுச் சென்றார். அவருடைய நோக்கங்கள் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் யோசிக்கவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
“அவரது எண்ணம் சரியானது, ஆனால் இது வேடிக்கையாகத் தெரிகிறது” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் எழுதியுள்ளார்.
ஒரு ட்விட்டர் பயனர், “பிரதமரின் அலுவலகமே இந்த வீடியோவை ட்வீட் செய்தது சிறந்த பகுதி. அவர் மரியாதையாக இருக்க முயன்றார், ஒரு பெண்ணை அவருக்காக குடை பிடிக்க விடவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”