நில அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்காததால் பாளையங்கோட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நபரை தீயணைப்பு படை வீரர்கள் விரைவாக செயல்பட்டு நொடியில் கப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவர் தன்னுடைய நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்துள்ளார். மேலும், தனது நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு சட்டப் போரட்டங்களில் ஈடுபட்டுள்ளார். நில அபகரிப்பில் நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியுள்ளார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த கணேசன் கடைசியாக தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, கணேசன் இன்று சுதந்திர தின நாளில் பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வீர தீர செயல்
…………
நெல்லையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்தவரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் அவரை மீட்டனர்_ pic.twitter.com/GpUUg9xPPr— Kamaraj_K (@kamarajkasi24) August 15, 2020
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், காவல்துறையினர், வருவாய் அலுவலர்கள் விரைந்து வந்து கணேசனை தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று பேச்சு வார்த்தை நடத்தினர். தீயணைப்பு படை வீரர்கள், மேல்நிலை நீத்தேக்கத் தொட்டி மீது ஏறி கணேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கணேசன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தடுப்பை தாண்டி குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்போது அங்கே மேலே இருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் விரைவாக செயல்பட்டு கணேசனை மடக்கிப் பிடிக்க அவருடன் மற்ற வீரர்களும் அந்த நபரை மடக்கிப் பிடித்து காப்பாற்றினார்கள். தற்கொலைக்கு முயன்ற கணேசனை காப்பாற்ற முயன்ற போது தீயணைப்பு படை வீரர் ஒருவர் தலையில் இடித்துக்கொண்டார்.
இதையடுத்து, கணேசனுக்கு நம்பிக்கை அளித்து அவரை கீழே இறக்கினார்கள்.
சுதந்திர தின நாளில் நிகழ இருந்த ஒரு துயரச் சம்பவத்தை தீயணைப்பு படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்ய முயன்ற நபரைக் காப்பாற்றினார்கள். இந்த தற்கொலை நிகழ்வை தடுத்து நிறுத்திய பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் அவரது குழுவினருக்கு அங்கே இருந்த காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சம்பவத்தின்போது அங்கே இருந்த அப்பகுதி மக்களும் தீயணைப்பு படையினரின் இந்த செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நில அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்காததால், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மீது ஏறி நின்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை தீயணைப்பு படை வீரர்கள் வீரைவாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.