இந்த வேலையை எல்லாம் பெண்கள் செய்ய முடியாது என்ற மூட நம்பிக்கைகளை உடைத்து நொறுக்கி வருகிறார்கள் இன்றைய புதுமைப் பெண்கள். ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று கருதப்பட்டு வந்த வேலைகளையும் பெண்கள் இன்றைக்கு அனாயசமாக செய்து வருகிறார்கள். பொதுவாக வாடகை கார் ஓட்டுவது என்பது ஆண்கள் மட்டுமே செய்யும் வேலையாக இருந்து வந்த நிலையில், பெண்கள் எங்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள்.
கொல்கத்தாவில் ஒரு பெண் கார் ஓட்டுநராக இருப்பதைப் பார்த்த ஒரு நபர் அதை பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் வியந்துள்ளார் பரம் கல்யாண் சிங் கொல்கத்தாவில் லேக் மாலுக்கு ஒரு வண்டியை முன்பதிவு செய்ததாகவும், பிக்அப் இடம் பற்றி அறிய ஒரு பெண் அவரை அழைத்ததாகவும் பகிர்ந்து கொண்டார். பயணம் தொடங்கியதும், அவர் வியந்து போயுள்ளார். பின்னர், அவர் அந்த பெண் என்ன படித்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு திப்தா கோஷ் தான் பிடெக் (எலக்ட்ரிகல்) பட்டம் பெற்றிருப்பதாகவும், பல்வேறு நிறுவனங்களில் 6 ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும் கூறினார்.
இருப்பினும், திப்தா கோஷின் தந்தை 2020-ல் அவரையும் அவரது தாயார் மற்றும் தங்கையை விட்டுவிட்டு இறந்துவிட்டார். அவருடைய தகுதிக்கு கிடைத்த எல்லா வேலைகளும் கொல்கத்தாவுக்கு வெளியே கிடைத்திருக்கிறது. ஆனால், திப்தா கோஷ் தனது தாயையும் சகோதரியையும் தனியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அதனால், ஒரு கமர்சியல் லைசன்ஸ் வாங்குவது என்று முடிவு செய்து ஒரு ஆல்டோ காரை வாங்கினார். அவர் 2021-ம் ஆண்டு முதல் திப்தா கோஷ் உபெர் நிறுவனத்தில் கார் ஓட்டி வருகிறார். “திப்தா கோஷ் இந்த வேலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்களுக்கு தினமும் ஆறு முதல் ஏழு மணிநேரம் வரை வாகனம் ஓட்டி மாதம் ரூ.40,000 சம்பாதிக்கிறார்.” என்று கூறியதாக பரம் கல்யாண் சிங் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து 4,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த பதிவைப் படித்த நெட்டிசன்கள் இந்த பெண்ணின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.
கொல்கத்தாவில் உபேர் ஓட்டுநரான திப்தா கோஷ், “கௌரவமான வேலையைச் செய்வது, உண்மையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற வாழ்க்கைக் கதைகளைத் தெரிந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஒரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்தார்.
“இது மிகவும் நல்ல விஷயம், அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். “இது சுய முன்னேற்றம். மற்றவர்களால் பாராட்டப்படும்” என ஒருவர் கம்மெண்ட் செய்துள்ளார். “பெண்கள் அதிகாரம் பெறுவது போல் உணர்கிறேன். ஆனால், அதே பதிவு ஒரு பையனைப் பற்றியதாக இருந்தால், நாம் அனைவரும் தோல்வியுற்ற மனிதனைப் போலவே கருதுவோம். இதுதான் பிரச்சினை” என்று இன்னொரு பயனர் வேறு ஒரு கோணத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“