நாடு முழுவதும் நேற்று (அக்டோபர் 24) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு பரிமாறி கொண்டாடப்பட்டது. கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் தீபாவளி பண்டிகை வாழ்த்து கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி, லடாக் யூனியன் பிரசேதத்தில் உள்ள கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். வீரர்களுக்கு மோடி இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை கூறினார். அப்போது, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் தமிழில் பிரபலமான பாடலான சுராங்கனி பாடலை மைக் முன் கூட்டாக பாடி அசத்தினர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைராகி வருகிறது.
தமிழில் ட்விட் செய்து அந்த வீடியோ பிரதமர் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்" என்று கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் மோடி வீரர்களுக்கு இனிப்புகளை ஊற்றுகிறார்.
மேலும், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். "தீபாவளி பண்டிகை நம் அனைவரது வாழ்வில் மகிழ்ச்சி தந்து, நல்வாழ்வை மேம்படுத்தட்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றத்திலிருந்து ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“