Viral video: ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி எஸ்.ஐ, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி எஸ்.ஐ பரமசிவம், ஊத்துக்கோட்டை பகுதியில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. எஸ்.ஐ. பரமசிவம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ குறித்து செய்திகள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பென்னாலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி எஸ்.ஐ பரமசிவம் மதுரையைச் சேர்ந்தவர். கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணி புரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், பென்னாலூர்ப் பேட்டை அருகே திடீர் நகரில், சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இம்மக்கள் கூலி வேலை செய்து வருக்கிறார்கள். இந்த மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தாங்கள் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தி வந்தனர். அந்தப் பகுதியில் 11 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்பதை அறிந்த எஸ்.ஐ. பரமசிவம், அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்துப் பேசினார். மேலும், தமிழக அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து, வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயறு வகைகள் வழங்குகிறது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி, குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். எனவே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வேண்டுமானால், அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலூர் பேட்டை காவல் நிலையம் 24 மணி நேரமும் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்துகொடுக்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்” என்று கேட்டுகொண்டார்.
மேலும், அந்த வீடியோவில், தப்பு செய்கிறவனைக்கூட விட்டுவிடுவேன். திருடன், கொலைகாரணைக் கூட விட்டுவிடுவேன். ஏனென்றால், அவனை இன்றைக்கு இல்லாவிட்டால், நாளைக்கு பிடித்துக்கொள்வேன். ஆனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் அவர்களை விடமாட்டேன். குழந்தைகளின் கல்வியை மறுப்பது சமூகத்தை கருவறுப்பது போன்று எச்சரிக்கை செய்கிறார். இதையடுத்து, அந்த பெற்றோர்கள் 11 குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தனர்.
எஸ்.ஐ பரமசிவம் பேசியதை அங்கே இருந்தவர்கள் தங்கள் செல்போனியில் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
காவல் பணியுடன் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி சமூகப் பணி செய்யும் எஸ்.ஐ. பரமசிவத்தை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்திகள் செய்தித் தாள்கள் செய்தி இணையதளங்களில் வெளியானது.
இந்நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.
குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.
குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.