அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றி சவுக்கடி கொடுப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். மீம்ஸ்கள் மூலம் அரசியல் நடப்புகளைத் தெறிக்கவிட்டுள்ளார்கள்.
பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டி வாகன ஓட்டிகளை வறுத்துஎடுத்து வந்த நிலையில், மத்திய அரசு பேட்ரோ டீசல் விலையைக் குறைத்துள்ளது. பெட்ரோல் விலை ரூ8.22 குறைந்து ரூ102.63க்கும், டீசல் விலை ரூ6.70 குறைந்து ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
ஏறுமுகத்திலேயே இருந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து, மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்று ஏகத்துக்கும் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார்கள்.
இன்றைய அரசியல் மீம்ஸ்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து தருகிறோம்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “சங்கி – பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைச்சிருக்கே… தமிழ்நாட்டு மக்கள் யாராவது நன்றி சொல்றானுங்களா பாரு…” என்று மீம்ஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ் காரர்களை கிண்டல் செய்துள்ளார்.
பெட்ரோல் விலை குறைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “பெட்ரொல் விலையை 2 மாதங்களில் 10 ரூபாய் உயர்த்திவிட்டு ரூ. 9.50 மட்டும் குறைப்பதா? செஸ் வரியை குறைக்காமல் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய கலால் வரியை மட்டும் குறப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, கட்டனூர் சேக், “இதுல இவ்வளவு விஷயம் இருக்கா. மாநிலத்துக்கு வரவேண்டிய கலால் வரி பங்கைத்தான் குறைச்சிருக்கீங்களா… என்ன ஒரு வில்லத்தனம்..” என்று கேட்டுள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “எண்ணெய் நிறுவனங்களையும் மீறி பெட்ரோல், டீசல் விலையை குறைத்த மோடிஜி வாழ்க” என்று வானத்தைப் போல படத்தின் தர்ம பிரபுவே மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
தர்மஅடிதர்மலிங்கம் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அடாடாடா…. என்னா மனுஷங்கையா பெட்ரோல், டீசல் விலையை இவங்களே உயர்த்தவும் செய்யுறாங்க குறைக்கவும் செய்யுறாங்க…” என்று வடிவேல் குரலில் மீம்ஸ் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.
சரவணன் M என்ற ட்விட்டர் பயனர், “பெட்ரோல் விலையை 9 ரூபாயும் , டீசல் விலையை 7 ரூபாயும் குறைத்திருக்கிறோம்.. ஆனா 30 ரூபாய் ஏத்தி வச்சிருக்கீங்களே…” என்று கவுண்ட மணி, செந்தில் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
சரவணன் M மற்றொரு மீம்ஸில், “பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும்ன்னு திடீர்னு சொன்னா வேற எதையாவது விலையை உயர்த்த போறாங்களோன்னு பதற்றாம இருக்குல்ல…” தனது கவலையையும் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மோஹன்ராம்.கோ என்ற ட்விட்டர் பயனர், “யாரோ பெட்ரோல், டீசல் விலையை ஏத்திட்டாங்களாம்…. பாவம், நம்ம ஜி தான் கஷ்டப்பட்டு விலையை குறைத்தாராம்…” என்று பிரதமரை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.
ராஜ்ய சபா தேர்தலில் அதிமுகவின் பக்கம் பாஜக நிற்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, மீம்ஸ் கிரியேட்டர் மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “உள்ளாட்சித் தேர்தலில்தான் பாக்காம நின்னுட்டீங்க போல?!” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கிண்டல் செய்துள்ளார்.
மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது!” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதற்கு, “என்ன இது… இவரே ‘ஜி’யைக் கலாய்க்க ஆரம்பிச்சிட்டாரு..?!” என்று வடிவேல் குரலில் மறைமுகமாக மோடி பெயரைக் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.
இத்தனை அரசியல் மீம்ஸ்களுக்கு இடையே, “பெரிய ஆசை எல்லாம் ஒண்ணும் இல்லீங்க…நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மாதிரி சொந்த படம் எடுக்கணும்… அம்புட்டுதேன்…!!” நெல்லை அண்ணாச்சி தனது ஆசையை ஜாலியாக வெளிப்படுத்தியுள்ளார்.
மயக்குநன் இன்று பதிவிட்டுள்ள மற்றொரு அரசியல் மீம்ஸில், “சில கட்சிகள் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தி, முக்கியப் பிரச்சனைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன!” என்று பிரதமர் மோடி கூறியதற்கு, “சில கட்சிகளா… ஒரே ஒரு கட்சியா..?!” என்று பிரதமருக்கே மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“