New Update
/
கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து சி.பி.ஐ (CBI) விசாரணை வேண்டும் என்பதற்கு பதில், CPI விசாரணை வேண்டும் எனப் பதாகை ஏந்தி போராடிய அ.தி.மு.கவினர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி தற்போது வரை 59 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, உயர் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், பணியிட மாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து இன்று (ஜுன் 24) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தி.மு.க அரசு பதவி விலக வேண்டும், சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் 'ஸ்டாலின் அவர்களே பதவி விலகு', 'மத்திய அரசே, மாநில அரசை டிஸ்மிஸ் செய்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தி அ.தி.மு.கவினர் போராட்டினர். அப்போது, சி.பி.ஐ (CBI) விசாரணை வேண்டும் என்பதற்கு பதில், CPI விசாரணை வேண்டும் என்றும் பதாகை ஏந்தப்பட்டிருந்தது. 'விசாரணை வேண்டும், விசாரணை வேண்டும் CPI விசாரணை வேண்டும்' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இது தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.