அதிபயங்கர தீவிரவாதியை மரியாதையுடன் அழைத்தாரா ராகுல்? ட்விட்டரில் அனல் பறக்கும் விவாதங்கள்!

பாஜகவினர் ட்விட்டரில் ராகுலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் தேடப்படும் அதிபயங்கர தீவிரவாதியான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜி என்று மரியாதையுடன் அழைத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.இதுக் குறித்து பாஜக – வினர் ராகுலை கடுமையாக சாடி ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், பிரதான கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்கள், மேடை பேச்சுகள் ஆகியவை பொதுமக்களாலும், மற்ற அரசியல் கட்சிகளால் அதிகம் உற்று நோக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது, “ கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர். புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஜி-யை சிறையிலிருந்து யார் விடுவித்தது.” என்றார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுத்தான் இன்று பாஜக வினரால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. தீவிரவாதியை ஜி என்று ராகுல் அழைப்பார். அவருக்கு தீவிரவாதிகள் என்றால் விருப்பம் அதிகம் என்று பாஜகவினர் ட்விட்டரில் ராகுலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கூடவே #RahulLovesTerrorists என்ற ஹாஷ்டேக்குகளும் ட்விட்டரில் பரவி வருகிறது. அமைச்சர் ஸ்ம்ருதி இராணி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் பேசிய வீடியோவையும் வெளியிட்டு  #RahulLovesTerrorists  ஹாஷ்டேக்கை பயன்படுத்தி உள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close