Viral video: காட்டு வழியே செல்லும் ரயில்பாதையில் ரயில் செல்லும்போது, ரயிலை நிறுத்தி யானைகள் பாதுகாப்பாக தண்டவாளங்களைக் கடக்க வனத் துறையினர் உதவிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத் துறை அதிகாரிகள், தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வனத்தில் பதிவு செய்யப்படும் வனவிலங்குகள் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் எல்லாமே சமூக ஊடகங்களில் வைரலாகத் தவறியதே இல்லை. இந்த வீடியோக்கள் பார்வையாளர்களை மகிழ்விப்பதுடன் வனவிலங்குகளைப் பற்றிய புரிதலையும், வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், காடுகளை மனிதர்கள் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் சாலைகள், ரயில் பாதைகள், ரெசார்ட்டுகள், சுரங்கங்கள் அமைத்து எப்படி வனவிலங்குகளை தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரத்தில், வனவிலங்குகளைப் பாதுகாப்பது பற்றிய ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில், காட்டு வழியே செல்லும் ரயில்பாதையில் ரயில் செல்லும்போது, ரயிலை நிறுத்தி யானைகள் பாதுகாப்பாக தண்டவாளங்களைக் கடக்க வனத் துறையினர் உதவிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, “ரயில்வே மற்றும் வனத் துறைக்கு இடையேயான வலுவான ஒருங்கிணைப்பு யானைகள் ரயில் பாதைகளைக் கடந்து செல்லும்போது விபத்து ஏற்படாமல் யானைகளின் மரணங்களைத் தடுக்கின்றன. அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக இதோ மனதைக் கவரும் வீடியோ பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், காட்டு வழியே செல்லும் ரயில் பாதையில், தூரத்தில் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்கின்றன. பின்னணியில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சத்தம் கேட்கிறது. உண்மையிலேயே, யானைகளின் உயிரைக் காக்கும் ரயில்வே துறையினர் மற்றும் வனத் துறையினரின் இந்த பணி பாராட்டப்பட வேண்டியதுதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"