பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தம் காரணமாக அவர் இன்று திங்கள்கிழமை பிற்பகல், மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் நலம் குறித்து பலவேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ratan Tata among top trending Google topics after rumours of ill health
இந்நிலையில், ரத்தன் டாடா உடல்நலக்குறைவு தொடர்பான தகவல் சமூக வலைதளத்தில் பரவியதால், தனது உடல் நலம் குறித்து குறிப்பிட்ட அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "என்னுடைய உடல்நிலை தொடர்பாக சமீபத்தில் வதந்திகள் பரவி வருவதை அறிந்தேன். இவை அனைத்தும் உண்மையில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வயது மூப்பு மற்றும் அதுசார்ந்த சுகாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளேன்.
இதில் வருத்தப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல நேர்மறையான சிந்தனையுடன் தான் இருக்கிறேன். எனவே மீடியாவிற்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ட்ரெண்டிங்கில் ரத்தன் டாடா
இந்த நிலையில், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் உடல்நலக்குறைவு குறித்த வதந்திகள் சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து, கூகுளில் அவரது பெயர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. ட்ரெண்ட்ஸ்.கூகுள் (trends.google) இன் படி, திங்களன்று நான்கு மணி நேர இடைவெளியில் ரத்தன் டாடா டாப் டிரெண்டிங் டாப்பிக்காக இருந்துள்ளார்.
அவர் குறித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூகுள் தேடல்களுடன் 1000 சதவிகிதம் அதிகரித்தது. அந்த அளவுக்கு அவர் தொடர்பான வதந்திகள் செய்திகளாக மாற்றப்பட்டு பரப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.