நடு வழியில் நின்ற ரயில்.. கர்ப்பிணி பெண்ணை முதுகில் சுமந்து தரையிறக்கிய காவலர்கள்!

தண்டவாளத்திலிருந்து படி உயரமாக இருந்ததால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிலரால் இறங்க முடியாத நிலை எற்பட்டுள்ளது

சிக்னல் பிரச்சனை காரணமாக நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்லப்படுவதை உண்மையாக்கியிருக்கிறார்கள் தமிழ்நாடு காவல்துறையினர். போலீஸை கண்டாலே பயந்தோடும் மக்கள் இன்று வரை இருக்கதான் செய்கிறார்கள். ஆனால் எல்லா போலீஸும் ஒரே மாதிரி இல்லை என்பது தான் அடிக்கடி தெரிய வரும் உண்மை. ரோட்டில் செல்லும் முதியவர்களுக்கு உதவுவதில் தொடங்கி, கொளுத்தும் வெயிலில் நின்று சிக்னல் காட்டும் டிராபிக் போலீஸ்கள் என பல நல்ல காக்கிகளும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு உதவிய தனசேகரன் மற்றும் மணிகண்டன் என்ற 2 போலீசாருக்கும் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னை மாந்கர காவல் ஆணையர் அவர்கள் இருவரையும் அழைத்து மனதார பாராட்டியுள்ளார். இத்தனை பேரின் பாராட்டுக்களை பெற அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

கடந்த 24 ஆம் தேதியன்று, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு சென்ற புறநகர் மின்சார ரயில், சிக்னல் பிரச்னை காரணமாக கோட்டை, பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றது.சுமார் 2 மணி நேரமாக சிக்னல் கோளாறு தொடர பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக ட்ராக்கில் குதித்து இறங்கி சென்று விட்டனர். தண்டவாளத்திலிருந்து படி உயரமாக இருந்ததால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிலரால் இறங்க முடியாத நிலை எற்பட்டுள்ளது.

இதே ரயிலில் தான் அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் பயணித்துள்ளார். 2 மணி நேரம் ஒரே இடத்தில் ரயில் நின்றுக் கொண்டிருந்ததால் பதற்றம் அடைந்த அமுதா உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சக பயணிகளிடம் புலம்பியுள்ளார். இந்த சமயத்தில் அங்கே வந்த போலீஸ்காரர்கள் தனசேகரன் , மணிகண்டன் ஆகியோர் அமுதாவின் நிலையைப் புரிந்து படிகள் போல நின்று கொண்டனர்.

அவர்களின் முதுகில் ஏறிக் கொண்டு அமுதா ரயிலை விட்டு கீழே இறங்கினார்.அதேபோல், ரயிலில் இறங்க முடியாமல் தவித்த பல முதியவர்கள் இறங்கவும் இரு போலீஸாரும் உதவினர். தக்க சமயத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு அமுதா மற்றும் முதியவர்களுக்கு உதவிய போலீஸ்காரர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில் ரயில் நிறுத்தம் பற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி சேனலின் ரிப்போட்டர் ஒருவரும் பயணிகள் இறங்க உதவி செய்துள்ளார்.

குறிப்பாக கர்ப்பிணி அமுதால் இறங்க மூன்றாவது படியாக நின்று தனது முதுகை கொடுத்தவர் அந்த ரிப்போட்டர் தான் அவரின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close