சாத்தான்குளத்தில் தந்தை - மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார் எழுந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணையில் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள், சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பினார்.
ஊடகங்களில் வெளியான அந்த அறிக்கையில், காவலர் மகாராஜன் என்பவர் அச்சுறுத்தும்படி கொச்சையாக பேசியதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் நடந்தபோது, இருந்த பெண் தலைமைக் காவலர் ரேவதி அங்கே நடந்த சம்பவத்தையும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவலர்கள் விடிய விடியா லத்தியால் தாக்கியதையும் சாட்சியம் அளித்தார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மருத்துவமனை படுக்கை ஆதாரங்கள் என பல ஆதாரங்கள் வெளியானபோதும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் நேரடி சாட்சியம் அளிக்க பலரும் அச்சப்பட்டனர்.
இந்த நிலையில்தான், தலைமைக் காவலர் ரேவதி அச்சமாக இருந்தபோதிலும் மனசாட்சிப்படி அன்று நடந்த சம்பவத்தை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியமாக அளித்துள்ளார்.
ரேவதி சாட்சியம் அளித்ததால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், உயர் நீதிமன்றம் தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையில் இருந்து மனசாட்சியுடன் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளித்த ரேவதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, டுவிட்டரில், தலைமைக் காவலர் ரேவதியைப் பாராட்டியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் ஹாட்ஸ் ஆஃப் ரேவதி என்றும் #revathi என்று நெட்டிசன்கள் பதிவிட்டதால் ரேவதியின் பெயர் ட்ரெண்டிங் ஆனது.
நெட்டிசன் ஒருவர் “முழு நாடும் உங்களுக்கு வணக்கம் செய்கிறது. காக்கி கிரிமினல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் தேவை. ஹாட்ஸ் ஆஃப் தலைமைக் காவலர் ரேவதி” என்று பதிவிட்டுள்ளார்
அதே போல, மற்றொரு நெட்டிசன், “தமிழ்நாட்டுக்கு தேவை ரேவத் போன்ற போலீசார்தான் தேவை. உங்கள் தைரியத்துக்கு மிகப்பெரிய மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"