இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாமல் டீமுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மைத்துனரின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இந்திய அணியில் அவர் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துகிறார்.
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். இதனால், ரோஹித் சர்மாவுக்கு என்ன ஆனது, அவர் எங்கே போயிருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ரோஹித் சர்மா டீமுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரது மைத்துனரின் திருமணத்திற்கு சென்று அங்கே நடனமாடி கலக்கி இருக்கிறார். ரோஹித் சர்மா அவரது மைத்துனரின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் மேடையில் நடனமாடும் வீடியோ ட்விட்டரில் பரவி வருகிறது. வியாழக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படும் அவரது மைத்துனர் குணால் சஜ்தேவின் திருமண விழாவில் ரோஹித் சர்மா நடனம் ஆடினார். ஒரு ட்விட்டர் பயனர், முஃபாடல் வோஹ்ரா, நடன நிகழ்ச்சியின் ஒரு பகுதியை வெளியிட்டு, “ரோஹித் சர்மாவின் மைத்துனரின் திருமணத்தில் நடனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அட்டகாசமாக அடிபோட்டு ஆடுகிறார்” என்று ஒரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவித்தார். “இங்கேயும் அவரது கால் நகர்வு உறுதியானது, அழகாக இருந்தது. இருப்பினும் கால் பக்கமே ஆதிக்கம் செலுத்தியது. கைகள் உடலுக்கு நெருக்கமாக இருந்தன, அதுவும் நல்லது. அவரது தலையை கவனியுங்கள், அப்படியே இன்னும் இருக்கிறது. சங்கீத நடனத்தில் மாஸ்டர் கிளாஸ்” என்று மற்றொருவர் கேலி செய்திருக்கிறார்.
ரோஹித் மற்றும் ரித்திகா சஜ்தே டிசம்பர் 13, 2015-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ரோஹித் இல்லாத ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார். வழக்கமாக ஒரு நாள் போட்டியில் கேப்டன் பாட் கம்மின்ஸ்தான் தலைமை தாங்குவார். அனால், மார்பக புற்றுநோயுடன் போராடிய அவரது தாயார் மரியா காலமானதைத் தொடர்ந்து அவர் குடும்பத்துடன் சிட்னியில் உள்ளார்.
2020-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் தொடர் இது. இதற்கு முன்னர், ஆஸ்திரேலியா மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. கடைசி இரண்டு போட்டிகளுக்கு ரோஹித் மீண்டும் தலைமை தாங்குவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“