ஆச்சரியம்! ரஷ்யாவில் ஒரேயொரு மாணவிக்காக நின்றுசெல்லும் ரயில்!

இந்த ஊரில் வசித்துவரும் 14 வயது சிறுமி கரினா கோஸ்லோவா பள்ளிக்கு செல்வதற்காக, தினந்தோறும் ரயில் அப்பகுதியில் நின்று செல்கிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜப்பானில் நகரிலிருந்து மிக தொலைவில் அமைந்துள்ள தீவில் வசித்துவரும் ஒரேயொரு மாணவி பள்ளிக்கு செல்வதற்காக, அப்பகுதிக்கு தினந்தோறும் ரயில் நின்றுபோவது குறித்த செய்தியை படித்து ஆச்சரியம் அடைந்திருப்போம். இப்போது, அதே போன்றதொரு சம்பவம் ரஷ்யாவிலும் நடந்துள்ளது.

ரஷ்யாவில் நகரிலிருந்து மிக தொலைவில் அமைந்திருக்கும் ஊர் போயாகோண்டா. இந்த ஊரில் வசித்துவரும் 14 வயது சிறுமி கரினா கோஸ்லோவா பள்ளிக்கு செல்வதற்காக, தினந்தோறும் ரயில் அப்பகுதியில் நின்று செல்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-முர்மான்ஸ்க் வழியாக செல்லும் ரயில்தான், மாணவி கரினாவை தினந்தோறும் பள்ளிக்கு ஏற்றிச் செல்கிறது. மாணவி வீடு திரும்ப மீண்டும் அந்த ரயில் போயாகோண்டாவுக்கு வந்து செல்கிறது.

கரினாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா நர்ஸரி பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர். கடந்த பல ஆண்டுகளாக போயாகோண்டாவுக்கு வந்துசெல்லும் ரயில்கள் அனைத்தும், ரயில்வே ஊழியர்களை மட்டும் ஏற்றிச்செல்லத்தான் அப்பகுதியில் நிற்கும். அதனால், நடாலியாவும், அவரது பேத்தி கரினா உட்பட போயாகோண்டா பகுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும், ரயில்வே ஊழியர்களை ஏற்றிச்செல்ல வரும் ரயிலின் நேரத்தையே பின்பற்ற வேண்டியிருந்தது. அந்த ரயிலை தவறவிட்டால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.

ஆனால், இந்த ரயிலில் தினந்தோறும் 3 மணிநேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், காலை 7 மணிக்கு ரயிலில் செல்லும் இவர்கள், மீண்டும் இரவு 7 மணிக்கு வரும் ரயிலில்தான் ஊர் திரும்ப முடியும். அதனால், போயாகோண்டாவுக்கு இரவு 9 மணிக்குதான் திரும்புவார்கள்.

“முன்பெல்லாம், தினமும் காலையில் கியோஸ்க் கிராமத்தில் குழந்தைகளுக்காக காத்திருப்பேன். பின்னர், போயாகோண்டா ரயில் நிறுத்தத்திற்கு ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்வோம்”, என கரினாவின் பாட்டி நடாலியா தெரிவிக்கிறார். “அங்கிருந்து கியாசியா செல்லும் ரயிலை பிடித்து, வழியில் மாணவர்களை ஏற்றிக்கொள்வோம். அங்கிருந்து பள்ளிக்கு பேருந்து மூலம் செல்ல வேண்டும். மீண்டும் பள்ளியிலிருந்து திரும்ப இதேபோன்று நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்”, என்கிறார் நடாலியா.

ஆனால், தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-முர்மான்ஸ்க் வழியாக செல்லும் ரயில், போயாகோண்டாவில் நின்று செல்வதற்கு ஏதுவாக புதிய ரயில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நேர விரயம் இனி இருக்காது. போயாகோண்டாவிலிருந்து இந்த ரயிலில் செல்லும் ஒரேயொரு மாணவி கரினாதான்.

×Close
×Close