Sania Mirza comment : இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உலககோப்பை போட்டிக்கான விளம்பரங்கள் பற்றி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 அன்று மோத இருக்கின்றன. பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அளவிலேயே இரண்டு தரப்பு ரசிகர்களின் மனநிலையும் இருக்கும். அது மட்டுமல்லாமல் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் மோதி கொண்ட ஒரு உலக கோப்பையில் கூட பாகிஸ்தான் இந்தியாவை வென்றது கிடையாது.
இதுப்போன்ற பல சம்பவங்களை வைத்துக் கொண்டு இந்தியா- பாகிஸ்தான் ரசிகர்கள் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுப்படுவது வழக்கமான ஒன்று.இம்முறை இதில் அதிகமான பங்குகள் விளம்பரங்களுக்கு போய் சேர்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறவுள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து டிவி மற்றும் சமூகவலைத்தளங்களில் மாறி மாறி விளம்பரங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் அண்மையில் பாகிஸ்தான் வெளியிட்ட விளம்பரம் ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி வெளியிட்ட இந்த விளம்பரத்தில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்ட போது சமூக வலைதளங்களில் வைரலான உரையாடலை நகைச்சுவை என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி வெளியிட்டு உள்ளது.
அந்த விளம்பரத்தில் அபிநந்தனை போலவே ஒருவர் மீசை வைத்துக் கொண்டு கையில் டீ கப்புடன் இந்தியாவின் உலகக்கோப்பை ஜெர்ஸியை அணிந்தவாறு பேசுகிறார். விளம்பரம் வெளியான சில மணி நேரத்திலேயே விவாதங்கள் வெடித்தன. விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “ இரு நாட்டுத் தரப்பிலும் இருந்தும் சங்கடமான விளம்பரங்கள் வெளியாகின்றன. விளையாட்டை இது போல விளம்பரப்படுத்த தேவையில்லை. அதுவும் இவ்வளவு கேவலமாக… போதுமான அளவுக்கு கவன ஈர்ப்பு உள்ளது. இது வெறும் விளையாட்டுதான். நீங்கள் அதற்கு மேல் நினைத்தால்… வாழ்க்கையைத் தேடுங்கள்” என்று கூறியுள்ளார்.
Cringeworthy ads on both sides of the border ???? seriously guys, you don’t need to ‘hype up’ or market the match anymore specially with rubbish! it has ENOUGH attention already!It’s only cricket for God sake, and if you think it’s anymore than that then get a grip or get a life !!
— Sania Mirza (@MirzaSania) 12 June 2019
சானியாவின் இந்த பதிவை இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் வரவேற்றுள்ளன.