இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், ரூ.1 லட்சம் மதிப்புள்ள தனது ஸ்கூட்டிக்கு ரூ.14 லட்சத்திற்கு VIP எண்ணை வாங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ.1 லட்சம் என்றாலும், VIP ஃபேன்ஸி எண்கள் மீதான காதாலுக்காக இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தனது ஸ்கூட்டரின் விலையை விட 14 மடங்கு அதிகமாக நம்பர் பிளேட்டிற்காக செலவிட்ட இவரின் செயல் பலரையும் பேச வைத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரில் வசிக்கும் சஞ்சீவ் குமார் சமீபத்தில் புதிய ஸ்கூட்டரை வாங்கினார். தனது ஸ்கூட்டருக்கு VIP எண்ணை பெற விரும்பினார். இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேச போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்த ஆன்லைன் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.14 லட்சத்திற்கு ஏலம் எடுத்து HP21C-0001 என்ற ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை வாங்கினார். இந்த ஆன்லைன் ஏலத்தில் 2 பேர் மட்டுமே பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இதில் சோலன் மாவட்டத்தின் பட்டியைச் சேர்ந்த ஒருவர் இந்த எண்ணுக்கு ரூ.13.5 லட்சம் வரை ஏலம் எடுத்திருந்தார். ஆனால், சஞ்சீவ் குமார் இந்த எண்ணை ரூ.14 லட்சத்திற்கு ஏலம் எடுத்து வாங்கினார்.
ஏலத்தின் முழுத் தொகையும் மாநில அரசின் வருவாயாக நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, இது மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த VIP எண் இதுவாகும். இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதுகுறித்து ஸ்கூட்டி உரிமையாளர் சஞ்சீவ் குமார் கூறியதாவது, சிறப்பு மற்றும் தனித்துவமான எண்களைச் சேகரிப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், தனது புதிய ஸ்கூட்டருக்கும் இதே போன்ற VIP எண்ணை பெற விரும்புவதாகவும் கூறினார். மேலும் அவர் ஆர்வத்திற்கு விலை இல்லை என்றும், ஏதாவது சிறப்பான ஒன்றை வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதன் விலையை பற்றி கவலைப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.