தாமிரபரணி ஆற்றில் பாட்டி ஒருவர் தலைகீழாக குதித்து சாகசம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல, வயது எதற்கு தடையில்லை என்று கூறும் உற்சாகமான இந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
முதுமையால் மூத்த குடிமக்களாகி விட்டால் வீட்டில் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும், உடல்நிலையில் தளர்வு, வேகமாக எதையும் செய்ய முடியாது என்று அமைதியாக இருப்பவர்களே அதிகம். அதிலும், மூதாட்டி என்றால், முடிந்த வேலை செய்வது ஓய்வு எடுப்பதுதான் வழக்கம் என்று கூறுவார்கள். ஆனால், முதுமை என்பது உன்பது உடலுக்குத்தான் மனதுக்கு இல்லை என்று ஆச்சரியப்படும் விதமாக சுறுசுறுப்பாக செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், ஒரு பாட்டி பார்ப்பவர்களை ஆச்சரியப்படும் வகையில் தமிரபரணியில் தலைகீழாக குதித்து அசத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாமிரபரணியில் மதகு மேல் இருந்து பாட்டி தலைகீழாக குதிக்கிற வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த வீடியோ உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் தாமிரபரணியில் உயரமான மதகு அருகே ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, வயதான ஒரு பாட்டி மதகு மேல் ஏறி ஆற்றில் தலைகீழாக குதிக்கிறார். பிறகு மீண்டும் ஏறி வந்து ஆற்றில் தண்ணீர் குபீர் என மேலே தெறிக்க அமர்ந்த நிலையில் குதிக்கிறார். இந்த வீடியோவைப் பார்க்கிற யாருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. சாகசம் செய்ய வயது ஒன்றும் தடை இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிட்டிருப்பதாவது; “தமிழ்நாட்டில் கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றில் புடவை அணிந்த மூத்த பெண் எளிதாக குதிப்பதைப் பார்த்து வியந்தேன். இது வழக்கமான செயல், அதில் அவர்கள் வல்லவர்கள் என்று எனக்குச் சொல்லப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் மதகு மேல் இருந்து குதிக்கிற இந்த பாட்டிக்கு நீச்சல் நன்றாகத் தெரிகிறது. இதுபோல, அவர் முதல்முறையாக குதிப்பது மாதிரி தெரியவில்லை. வழக்கமாக இப்படி குதிப்பவராக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
தாமிரபரணி ஆற்றில் பாட்டி ஒருவர் தலைகீழாக குதித்து சாகசம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல, வயது எதற்கு தடையில்லை என்று கூறும் உற்சாகமான இந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“