காரமடையை அடுத்துள்ள கட்டாஞ்சி மலைப்பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரு குட்டிகளுடன் கூடிய ஆறு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கணுவாய்பாளையம், சீளியூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை,தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் இந்த யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாய நிலங்களில் இரவு காவலுக்கு வரும் காவலாளிகள் பணிக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கட்டாஞ்சி மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய குட்டியுடன் கூடிய மூன்று காட்டு யானைகள் அங்கிருந்த தனியாருக்கு சொந்தமான விளைநிலத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளன. அப்போது, விளைநிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பதை கண்ட காட்டு யானைகள் அதனை உடைத்து விட்டு நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்துள்ளன. இதனால் விவசாயிகள்,பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“