இதுதான் தூய்மை இந்தியாவா? பொது இடத்தில் சுவற்றில் சிறுநீர் கழித்த ராஜஸ்தான் சுகாதார அமைச்சர்!

ராஜஸ்தான் மாநில சுகாதார துறை அமைச்சர் பொது இடத்தில் சுவற்றில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநில சுகாதார துறை அமைச்சர் பொது இடத்தில் சுவற்றில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சுகாதார துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் கலிசரண் சரஃப். இவர், பொது இடத்தில் சுவற்றில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசு தங்களின் செயல்திட்டங்களுள் முக்கியமாக கருதுவது ‘தூய்மை இந்தியா’ திட்டம். ஆனால், பாஜக ஆளும் மாநிலத்தின் அமைச்சரே இவ்வாறு பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் வெளியாகியிருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, “இது ஒன்றும் பெரிய விஷயமல்ல”, என அமைச்சர் கலிசரண் சரஃப் தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்து வரும் நிலையில், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மாநகராட்சிக்கு ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மை இந்தியா திட்டத்துக்காக பெரும் பணத்தை அரசு செலவிட்டு வரும் நிலையில், இத்தகைய இழிவான செயல்களில் பாஜக தலைவரே ஈடுபட்டு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக, அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் அர்ச்சனா ஷர்மா தெரிவித்தார். தனது தொகுதியிலேயே அமைச்சர் இவ்வாறு விதிகளை உதாசீனப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதுபோன்று, அமைச்சர் கலிசரண் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது இது முதன்முறை அல்ல எனவும், தோல்பூர் இடைத்தேர்தலின்போதும் அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும், தேர்தல் வேலைகளில் அதனை புகைப்படம் எடுக்க முடியவில்லை எனவும் அர்ச்சனா சர்மா தெரிவித்தார்.

இந்த புகைப்படம், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுபக்குழு செயலாளரும் ஒருங்கிணைப்பாளருமான தனிஷ் அப்ரர், தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

×Close
×Close