viral video: பனிப் பிரதேசத்தில் மலையில் வாழும் பனிச் சிறுத்தையிடம் சிக்கிய ஒரு ஆடு எப்படி தப்பியது என்ற த்ரில்லிங்கான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வன விலங்குகள் மனிதர்கள் இடையே ஆர்வமூட்டக் கூடியவை. அதிலும் வேட்டை விலங்குகளின் பாய்ச்சல், அதன் வேட்டையாடும் திறன் ஆகியவை மனிதர்களை வியக்க வைப்பவை. அதற்கு, மனிதர்களும் ஒரு காலத்தில் வேட்டையாடும் உயிரினமாக இருந்தான் என்பது கூட காரணமாக இருக்கலாம். அதனால்தான், சமூக ஊடகங்களில் வனவிலங்குகள் வேட்டையாடுகிற நிறைய வீடியோகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில், பனிப் பிரதேசத்தில் மலையில் வாழும் பனிச் சிறுத்தையிடம் சிக்கிய ஒரு ஆடு எப்படி தப்பியது என்ற த்ரில்லிங்கான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு பனி பிரதேசத்தில் உள்ள மலையில் வாழும் பனிச் சிறுத்தை ஒன்று ஆடு ஒன்றைப் பார்த்தது பாய்ந்து துறத்துகிறது. ஆடு சளைக்காமல் தப்பி ஓடுகிறது. விடாத சிறுத்தை பாய்ந்து வாயில் ஆட்டை கவ்விப் பிடிக்கிறது. அவ்வளவுதான் ஆடு கதை முடிந்தது என்று நினைக்கும்போது, ஆடு கடுமையாக முயற்சி செய்து சிறுத்தையிடம் இருந்து தப்பி மலைக்கு கீழே இருக்கும் நீர் நிலையில் குதித்து நீந்தி தப்பிச் செல்கிறது. சிறுத்தையோ, இரையை தவறவிட்ட ஏமாற்றத்தில் செல்கிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “இந்த வீடியோவை கடைசி வரை பாருங்கள். பனிச் சிறுத்தைகள் குறுகிய முன்னங் கால்களையும் மற்றும் நீண்ட பின்னங் கால்களையும் கொண்டது. அது செங்குத்தான மற்றும் முரட்டுத்தனமான சூழலில் பயணிக்கவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. மலை ஆடுகளுக்கு கால்களில் பிளவுபட்ட குளம்புகள் உள்ளன. அவை சமநிலையை மேம்படுத்த அகலமாக விரிகின்றன. இது சமமானவர்களின் சண்டை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"