New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/21/sonu-sood-rescues-snake-2025-07-21-14-56-48.jpg)
நடிகர் சோனு சூட் பாம்பு மீட்பு சாகசம்: பாராட்டுக்களும், விமர்சனங்களும்!
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சோனு சூட் பாம்பு மீட்பு சாகசம்: பாராட்டுக்களும், விமர்சனங்களும்!
தனது வீட்டிற்குள் நுழைந்த பாம்பை எந்தவித தயக்கமுமின்றி வெறும் கைகளால் பிடித்து, அதை பத்திரமாக விடுவித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் செயல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை அள்ளி வருகிறது.
சமீபத்தில், சோனு சூட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், அவரது வீட்டு வளாகத்திற்குள் சாரைப்பாம்பு (Rat Snake) நுழைந்திருப்பதை அவர் காண்கிறார். பொதுவாக, பாம்பைக் கண்டால் பெரும்பாலானோர் பதற்றமடைவார்கள் அல்லது பயத்தில் விலகிச் செல்வார்கள். ஆனால், சோனு சூட் அப்படிச் செய்யவில்லை. எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, தன் வெறும் கைகளால் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்தார்.
பாம்பைப் பிடித்தவுடன், அதை துணிப் பைக்குள் கவனமாகப் போட்டு, பின்னர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவிக்குமாறு தனது பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சோனு சூட்டின் தைரியத்தையும், விலங்குகள் மீதான அவரது அன்பையும் கண்டு வியந்து போயினர். "ஹர ஹர மகா தேவ்" என்ற தலைப்புடன் அவர் இந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சோனு சூட், பிடிபட்ட பாம்பு விஷத்தன்மையற்ற சாரைப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்று விளக்கினார். அத்துடன், "பாம்புகளைக் கண்டால், நீங்களாகவே பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் மாறாக, உடனடியாக பாம்பு பிடிக்கும் நிபுணர்களை அழைக்க வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பாதுகாப்பாகக் கையாள முடியும்," என்று அவர் வலியுறுத்தினார்.
சோனு சூட்டின் இந்த வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், கருத்துக்களையும் குவித்து வருகிறது. பலரும் அவரது இரக்க குணத்தையும், அபாரமான தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர். "நீங்கள் திரையிலும் நிஜத்திலும் ஹீரோதான்," "மனிதநேயத்தின் மறு உருவம்," "உங்களைப்போல் நடிகர் கிடைப்பது அரிது," போன்ற பல கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதில் தொடங்கி, பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் சோனு சூட், இந்தச் செயல் மூலம் மீண்டும் ஒருமுறை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் ஒரு சாகச வீரராகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் அவர் தன்னை நிலைநிறுத்தியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.