Statue of Unity : சர்தார் வல்லபாய் பட்டேல் மாபெரும் சிலையில் இடம்பெற்றுள்ள ஸ்டாச்சு ஆஃப் யூனிட்டி பதாகையில் தமிழில் செய்யப்பட்ட தவறான மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மாபெரும் சிலை இன்று குஜராத்தில் திறந்து வைக்கப்பட்டது. அச்சிலைக்கு ஒற்றுமையில் சிலை என்று பெயர் வைக்கவும் முடிவெடுத்தனர். ஆனால் அந்த பதாகையில் செய்யப்பட்டுள்ள தவறான தமிழ் மொழிபெயர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Statue of Unity : ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி தமிழ் மொழிபெயர்ப்பு
அமெரிக்காவுக்கு ஒரு ஸ்டாச்சு ஆஃப் லிபர்ட்டி போல இந்தியாவிற்கு ஒரு ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி. 3000 கோடி செலவில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை அமைக்க ஆயிரக்கணக்கானோர் கடுமையாக உழைத்தனர். பல்வேறு விஷயங்களை உன்னிப்பாக கவனித்த அரசு, கடைசியில் மொழிபெயர்ப்பு விஷயத்தில் கவனத்தை தவறவிட்டது.
வடிவேலு காமெடியில் வருவது போல, ‘இவ்வளவு கவனிச்சியே கடைசியில் கொண்டையை மறந்துட்டியே’ என்பது போல் ஆனது இந்த மொழிபெயர்ப்பு விவகாரம். ‘ஸ்டாச்சு ஆஃப் யூனிட்டி’ என்பது ‘ஒற்றுமைக்கான சிலை’ என்ற அர்த்தம் பெறுகிறது. இந்த அர்த்தத்தை கூகுல் கூட காட்டும்.
சர்தார் வல்லபாய் பட்டேல் முகம் சரியாக ஒற்றுப் போகிறதா என்பதை அறிய பட்டேலை நேரில் பார்த்தவர்களிடம் சென்று புகைப்படங்கள் சேகரித்தது சிலை அமைப்பு குழு. அந்த முயற்சியில் ஒரு பங்கை மொழிபெயர்ப்பில் செலவழித்து, இதன் அர்த்தம் சரிதானா என்று ஒருவரையாவது கேட்டிருக்கலாம். அப்படி கேட்டிருந்தால் இந்த சர்ச்சையில் இருந்தும் தப்பித்திருக்கலாம்.
‘ஸ்டாச்சு ஆஃப் யூனிட்டி’ என்பதை தவறாக மொழிபெயர்த்து ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பார்த்த தமிழக மக்கள் பலரும், ‘இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை’ என்று விமர்சித்து வருகின்றனர்.