Stray dog saved five kittens from cold : நாய்களுக்கும் பூனைகளுக்கும் எப்போதும் ஆகவே ஆகாது என்று சொல்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். நீங்களும் அப்படி ஒரு எண்ணத்தை வளர்த்து வைத்திருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். நாய்கள் போன்ற அன்பான ஜீவராசிகளை காணவே இயலாது. மனிதர்களோடு மட்டுமின்றி மற்ற மிருகங்களுடனும் மிகவும் அன்பாகவும் ஆறுதலாகவும் பழகும் தன்மை கொண்டவை. வட அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவை கொண்டிருக்கும் பனிக்காலம் இது. ஐந்து குட்டி பூனைகள் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருக்க ஒரு நாய் அந்த ஐந்து பூனைக்குட்டிகளையும் அரவணைத்து குளிரில் இருந்து பாதுகாப்பு அளித்துள்ளது.
கடந்த வாரம் கனடாவின் தெரு ஒன்றில் ஐந்து பூனைக்குட்டிகள் கடும் குளிருக்குள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று அந்த ஐந்து பூனைக்குட்டிகளையும் இவ்வாறு காப்பாற்றியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விலங்குகள் காப்பகத்திற்கு தகவல் அளிக்க உடனே நாயையும், ஐந்து பூனைக்குட்டிகளையும் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.
அங்கே அழைத்துச் செல்லப்பட்ட நாய்க்கு செரெனிட்டி என்று பெயரிட்டுள்ளனர். அந்த நாயும் பூனைகளும் பாதுகாப்பு மையத்தில் தற்போது நலமாக இருக்கின்றன. தற்போது செரெனிட்டியை யாரோ தத்தெடுத்துக் கொள்ள உள்ளனர். ஐந்து பூனைக்குட்டிகளும் தற்போது பாதுகாப்பு மையத்தின் பராமரிப்பில் உள்ளன. தத்துக் கொடுக்க ஏதுவான வயது வரும் வரை அந்த பூனைக்குட்டிகள் அங்கு தான் வளரும் என்றும் பெட் அண்ட் வைல்ட்லைஃப் ரெஸ்க்யூ நிறுவனம் தங்களின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.