இரு கைகள் இல்லாமல் பிஎச்டி பட்டம் பெற்ற மாளவிகா: வலிகளில் இருந்து மீண்டது எப்படி?

நம் வாழ்க்கையில் விபத்து எப்போது நேரும் என நமக்கு தெரியாது. ஆனால், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையையே புரட்டிப்போடும் விபத்துகள் சிலருக்கு நேரும்.

நம் வாழ்க்கையில் விபத்து எப்போது நேரும் என நமக்கு தெரியாது. ஆனால், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையையே புரட்டிப்போடும் விபத்துகள் சிலருக்கு நேரும். அந்த விபத்தின் சுவடுகளிலேயே மங்கி நாம் மூலையில் அமர்ந்துகொள்ள போகிறோமா, அல்லது அந்த வலியைக் கடந்து கனவுகளை நோக்கி பயணிக்கப் போகிறோமா என்பதை நாம் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

மாளவிகா ஐயர் முடிவு செய்தார். அவருக்கு ஏற்பட்ட விபத்தின் தழும்புகளிலிருந்து வெளியேறி இப்போது ஐநா மாநாடு ஒன்றில் இந்தியாவின் சார்பாக உரையாற்றிய பெருமை பெற்றிருக்கிறார் மாளவிகா.

13 வயதில் சிறுமியாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாளவிகா, வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி தன் இரண்டு கைகளையும் இழந்தவர். கால்களிலும் பெரும் காயம் ஏற்பட்டது. ஒன்றரை வருடங்கள் முழு ஓய்வில் இருந்தார். நடக்க முடியாத நிலைமை. மீண்டும் நடக்க வேண்டும் என நினைத்தார் மாளவிகா. செயற்கை கைகளை பொருத்திக் கொண்டார்.

“நான் 10-வது படித்துக் கொண்டிருக்கும்போது அந்த சம்பவம் நிகழ்ந்தது. அதனால், பள்ளியில் என்னால் தொடர்ந்து படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. காலம் கடந்து கொண்டே இருந்தது”, என்கிறார் மாளவிகா.

மீண்டும் படிக்க ஆரம்பித்தபோது தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்தார். மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றார். தன்னைப் போன்று உடலால் இயலாதவர்கள் குறித்து வாசிக்கத் துவங்கினார். “என்னைப் போன்றே மாற்றுத்திறனாளிகள் பலரும் , மற்றவர்கள் பார்த்து பரிதாபப்படுவதை வெறுக்கிறோம். நாங்கள் உயிருடன் இருக்கிறோம். இது எங்களுக்குக் கொண்டாட்டமாக உள்ளது”, என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மாளவிகா.

”2012-ஆம் ஆண்டு, எனக்கு விபத்து நடைபெற்ற அதே நாளின்போது, என்னுடைய பயம், உடல் குறித்த அச்சம், பல கேள்விகள் எல்லாவற்றைக்யும் கடந்து, எனக்கு நேர்ந்தவற்றை முகநூலில் எழுதினேன்”. மாளவிகாவின் அந்த பதிவை பலரும் பகிர்ந்தனர். இணையத்தில் அப்பதிவு வைரலானது.

இப்போது மாளவிகா பிஎச்டி முடித்திருக்கிறார். வளர்ந்து வரும் உலக தலைவர்கள் எனும் விருதை நியூயார்க்கில் பெற்றார் மாளவிகா. இந்த விருதை பெறும் முதல் பெண் என்ற பெருமையும் மாளவிகாவையே சாரும். கடந்தாண்டு டெல்லியில் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார் மாளவிகா.

தன்னுடைய விடாமுயற்சி, நம்பிக்கை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மாளவிகா, “என்னைப் பாருங்கள். நான் கைகள் இல்லாமல் பிஎச்டி முடித்திருக்கிறேன். வாழ்க்கையில் நடைபெறும் இக்கட்டாண சூழ்நிலைகள், இயலாமை இவையெல்லாம் உங்கள் வாழ்க்கை புத்தகத்தின் ஒரு பகுதிதான். ஆனால், அது மட்டுமே முழு கதை அல்ல. உங்களின் வாழ்க்கையை சந்தோஷமாக எழுத முடிந்தவர் ஒருவர்தான் – அது நீங்கள் தான்”.

மாளவிகா கூறுவது உண்மைதானே!

×Close
×Close