சத்தமாக ஏதோ ஒன்று வெடிக்க அதைப் பற்றி ஒருவர் தனது 4 வயது மகளிடம் இது விமானமா? வான்வழித் தாகுதலா என்று கேட்க அதற்கு அந்த சிறுமி சிரித்துக்கொண்டே வான்வழித் தாக்குதல் என்று கூறுகிறாள். சிரியாவில் போரினால் ஏற்பட்டுள்ள குழந்தைகளின் அவல நிலையைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உலகப் பொதுச் சமூகத்தை கேள்வி எழுப்பி வருகிறது.
சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது.
உலகத்தில் எந்த நாட்டில் போர் ஏற்பட்டாலும் முதலில் அங்கே பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களும்தான். அரசியல் அதிகாரத்துக்காக பொருளாதார அதிகாரத்துக்காக நடத்தப்படும் போரில் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களும்தான்.
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சாராகுஃப் பகுதியிலிருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வலுக்கட்டாயமாக முகமத் என்பவருடைய குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் சர்மதா பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அப்பகுதியில், அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெடிகுண்டு சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டிருப்பதால் வெடிகுண்டு தாக்குதல் சத்தம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. வெடிகுண்டு சத்தங்களால் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப்படுவதை உணர்ந்த முகமத், தனது 4 வயது மகள் செல்வாவுக்கு அப்படியான பயம் வரக்கூடாது என்பதற்காக, குண்டுகள் விழுவதை அங்கு யாரோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தனது மகளுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.
வெடிகுண்டு வெடிக்கும்போது எல்லாம் முகமத் தனது மகளுக்கு அங்கே யாரோ விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார். அதனால், சிறுமி செல்மா வெடிகுண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் விளையாட்டு என நினைத்து சிரித்துள்ளாள்.
இது குறித்து சிறுமியின் தந்தை முகமத், தனது மகள் செல்மாவால் போரைப் புரிந்துகொள்ள முடியாது. அவள் இந்த வெடிகுண்டு சத்தங்களைக் கேட்டு பயந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த விளையாட்டை நான் அவளுக்கு சொல்லிக்கொடுத்தேன் என்று கூறியிருப்பது உலக பொதுச் சமூகத்தின் மனசாட்சியின் சட்டையைப் பிடித்து உலுக்குவதாக உள்ளது.
வெடிகுண்டு சத்தம் கேட்டு சிரிக்கும் அந்த மழலையின் சிரிப்பை பாருங்கள் அந்த சிறுமியின் சிரிப்பு உலக சமூகத்தின் முகத்தில் அறைவதை உணர முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.