கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா அவரது சினிமா கரியரில் ஆரம்ப கட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மும்பையில் பிறந்த நடிகை தமன்னா பாட்டியா, தனது 13 வயதிலேயே தியேட்டரில் நடிப்பை கற்கத் தொடங்கினார். 2005-ம் ஆண்டில், அபிஜீத் சாவந்தின் ‘லாஃப்ஸோ மெய்ன்’ என்ற இசை ஆல்பத்தில் நடித்ததன் மூலம் தமன்னா பாட்டியா தனது கரியரைத் தொடங்கினார். பின்னர், அவர் ‘சந்த் சா ரோஷன் செஹ்ரா’ என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் 2006-ம் ஆண்டு கேடி என்ற படத்தில் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி படம் சினிமாவில் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. அதே ஆண்டில் ‘ஸ்ரீ’ என்ற தெலுங்கு சினிமாவில் நடித்தார். இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
அதற்கு பிறகு, நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி சினிமாக்களிலும் பிசியாகி விட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தமன்னா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அண்மையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா டான்ஸ் ஆடிய ‘காவாலயா நூ காவாலயா’ பாடல் வீடியோ பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ‘காவாலயா நூ காவாலயா’ பாடலை ரீல் செய்யாத பிரபலங்களே இல்லை என்கிற அளவுக்கு சின்னத்திரை, பெரியதிரை பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை‘காவாலயா நூ காவாலயா’ பாடலுக்கு ரீல் செய்தனர்.
தற்போது ஹிந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, நடிக்க துவங்கிய புதிதில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா அவரது சினிமா கரியரில் ஆரம்ப கட்டத்தில் பேசிய வீடியோ ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமன்னா அந்த பேட்டியில், தான் பள்ளியில் படித்து வருவதாகக் கூறுகிறார். மேலும், 2005-ல் தான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளேன் என்று தெரிவித்து, தேர்வுக்காக தயாராகி வருவதாகப் பேசினார்.
முதல் படத்துக்கான ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திடும்போது தனக்கு 13 வயது தான் ஆகியிருந்தது என்று கூறினார். தமன்னாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“