வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள், குடும்பத்தினரில் ஒருவராக தான் பார்க்கப்பட்டு வருகிறது. பலர் செல்லப் பிராணிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பார்த்திருப்போம். ஆனால், இந்த குடும்பமோ ஒரு படி மேல் சென்று வண்ண வளையல்கள், பலகார சீர்வரிசையுடன் 2 பூனைகளுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். இந்த விழாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோவையை சேர்ந்த பெண் ஒருவர், 3 ப்ரிஸியன் வகை பூனைகளை வளர்த்து வருகிறார். அதில், ஜீரா மற்றும் ஐரிஸ் எனப்படும் இந்த இரண்டு பெண் பூனைகளும், கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பூனை பராமரிப்பு மையம் ஒன்றில், இரண்டு பூனைகளுக்கு வளையல், மாலை அணிவித்து வளைக்காப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினர்.
பெண்களுக்கு செய்வது போலவே செல்லப்பிராணிகளை அலங்கரித்து வளையல்கள் அணிவித்து கேக் வெட்டி, பலகாரங்கள் ஸ்வீட் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதுகுறித்து பேசிய பூனையின் உரிமையாளர், குடும்பத்தில் உள்ள பெண் கர்ப்பம் தரித்தால், வளைகாப்பு நடத்துகிறார்கள். அதே போல், எங்கள் குடும்ப உறுப்பினர்களான பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம். கிளினிக்கிற்கு வந்து டாக்டர்களுடன் சேர்ந்து வளைகாப்பு ஏற்பாடு செய்தோம் என்றார்.
இரண்டு பூனைகளுக்கு ஒரு வயது தான் ஆகிறது. இதில், ஜீரா பூனை கர்ப்பமாகி 50 நாள்களும், ஐரீஸ் பூனை கர்ப்பமாகி 35 நாள்களும் ஆகிறது. பொதுவாக பூனைகளின் பிரசவ காலம் 62 நாள்கள் ஆகும் என தகவல் தெரவிக்கின்றன.
பூனை வளைகாப்பின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக, லைக்குகள் குவிந்து வருகின்றன. மனிதர்கள் மற்றும் செல்ல பிராணிகள் இடையேயான உறவு அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil